You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரஸ்திகா: நான்கு அறுவை சிகிச்சைளுக்குத் தயாராகும் 3 வயது குழந்தை - பாதயாத்திரையில் பெற்றோர்
- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பிரஸ்திகாவுக்கு இப்போதுதான் மூன்று வயதாகிறது. எதிர்வரும் மாதங்களில் அந்தக் குழந்தைக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையில், குழந்தை பிரஸ்திகாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் குணமாகவும் சிகிச்சைகள் சிறப்பாக நடைபெறவும் வேண்டிக் கொள்வதற்காக, பிரஸ்திகாவை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு, அந்தக் குழந்தையின் பெற்றோர் கதிர்காமம் ஆடிவேல் திருவிழாவுக்கு, சுமார் 250 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாகச் செல்கின்றனர்.
இதில் நூறு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம், காட்டு வழிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரஸ்திகாவுக்கு இதயத்தில் பல பிரச்னைகள் உள்ளதாக குழந்தையின் தாய் சரண்யா கூறுகிறார். இதற்காக மூன்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இது தவிர, உயர் ரத்த அழுத்தம் காரணமாக அந்தக் குழந்தையின் கண் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அதற்காகவும் அறுவை சிகிச்சையொன்று செய்ய வேண்டியுள்ளதாகவும் சரண்யா குறிப்பிடுகின்றார்.
இந்த அறுவை சிகிச்சைகளுக்கு முன்னதாக, கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்திர ஆடிவேல் திருவிழா உற்சவத்தில் கலந்து கொண்டு, தமது குழந்தையின் ஆரோக்கியத்துக்காக அங்கு பிரார்த்திக்கும் பொருட்டு, இந்தப் பாத யாத்திரையை இவர்கள் மேற்கொள்கின்றனர்.
குழந்தை பிரஸ்திகாவின் - தாய் சரண்யா; தந்தை நிமால். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டம், கல்லடி பிரதேசத்தில் வசிக்கின்றார்கள். "எனது கணவர் சிங்களவர். 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக நான் கொழும்புக்குச் சென்று விட்டேன். அதனால் எனக்கு சிங்களம் தெரியும். நானும் - எனது கணவரும் காதலித்து 16 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டோம்" என்கிறார் சரண்யா.
நிமாலின் சொந்த இடம் அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஹொரவப்பொத்தானை. அவர் கூலிவேலை செய்கிறார். மதம் கடந்த இவர்களின் திருமணம் காரணமாக, குடும்பத்தவர்கள் இவர்களுடன் பேசுவதில்லை.
சரண்யா - நிமால் தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் இருவரும் ஆண்கள், மூத்தவருக்கு 15 வயது. இரண்டாமவர் பெற்றோரின் பாதயாத்திரையில் இணைந்து கொண்டுள்ளார், மூன்றாவது குழந்தை, பிரஸ்திகா.
பிரஸ்திகாவுக்கு என்ன பிரச்னை?
குழந்தை பிரஸ்திகாவின் இதயத்தில் ஐந்து பிரச்னைகள் உள்ளன என்று வைத்தியர்கள் கூறியுள்ளதாகக் கூறுகிறார் தாய் சரண்யா.
"பிரஸ்திகாவின் இதயத்தில் பெரிய ஓட்டைகள் இரண்டு உள்ளன. இடது பக்க இதயத்தில் வீக்கம் உள்ளது, இதயத்திலிருந்து ரத்தம் தள்ளப்படும் அளவு குறைவு. நுரையீரலுக்கு ரத்தம் செல்லும் குழாய் சுருங்கியுள்ளது, சுவாசக்குழாய் வாசலில் அடைப்பும் உள்ளது," என்கிறார் சரண்யா.
மேலும் குழந்தை பிரஸ்திகாவுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளதாகவும் இதனால் அவரின் இடது கண் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் தாய் சரண்யா கூறுகிறார்.
"பிள்ளையின் இதயத்தில் இவ்வாறான பிரச்னைகள் உள்ளமையினால் அவரின் உடலுக்குத் தேவையான ஒக்சிசன் முழுவதுமாகக் கிடைப்பதில்லை. அதனால், பிள்ளை அதிகமாக அழுதால் அல்லது சிரித்தால் இதயத்துடிப்பு அதிகமாகி, ஒக்சிசன் கிடைப்பது தடைப்படும். அதனால் அவரின் உடல் நீல நிறமாகி விடும். இரண்டு தடவை அப்படி நடந்துள்ளது. அந்த வேளைகளில் குழந்தைக்குக் கிட்டத்தட்ட உயிர் இருக்காது. சிகிச்சைகளுக்குப் பின்னர்தான் உயிர் திரும்பியிருக்கிறது," என சரண்யா விவரித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆகியவற்றில் குழந்தை பிரஸ்திகா சிகிச்சை பெற்று வருகின்றார்.
"இதய அறுவை சிகிச்சைகளை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையிலும், கண் அறுவை சிகிச்சையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் என மொத்தமாக நான்கு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வற்குத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று சரண்யா கூறினார். சத்திர சிகிச்கைகள் நடைபெறவுள்ள இடங்கள் இரண்டும் அரசு மருத்துவமனைகளாகும்.
பிரஸ்திகா 6 மாத குழந்தையாக இருந்தபோது அவருக்கு நிமோனியா தாக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் உயிர் பிழைக்க மாட்டார் என அப்போது கூறப்பட்டுள்ளது.
"குழந்தைக்கு நிமோனியா ஏற்பட்டதையடுத்து அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை வைக்கப்பட்டது. ஆனாலும் குழந்தை பிழைக்காது என்றுதான் கூறப்பட்டது. இந்நிலையில் டாக்டர் சித்ரா உள்ளிட்டோர் எடுத்துக் கொண்ட பெரும் பிரயத்தனம் காரணமாக எங்கள் பிள்ளை பிழைத்தது," என்றார் சரண்யா.
கதிர்காமம் முருகன் கோயில் சிறப்புகள்
கதிர்காமம் முருகன் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். இந்தக் கோயிலில் நடைபெறும் வருடாந்திர ஆடிவேல் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகப் பெரும்பாலானனோர் நடந்தே பயணிப்பர். இது 'கதிர்காம யாத்திரை' என அழைக்கப்படுகிறது.
இம்முறை கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்திர ஆடிவேல் விழா உற்சவம் எதிர்வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைகிறது.
கடந்த 21 வருடங்களாக கதிர்காமம் ஆடிவேல் திருவிழாவுக்குத் தொடர்ச்சியாகச் சென்று வருபவரும் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாதயாத்திகர்கள் சங்கத்தின் செயலாளரகவும் பணியாற்றும் ஏ. ஜீவராஜா, கதிர்காமம் முருகன் கோயில் குறித்தும் கதிர்காமம் பாத யாத்திரை தொடர்பிலும் பிபிசி தமிழிடம் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். இவர் ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
"உலகிலுள்ள எந்த ஆலயங்களுக்கு யாத்திரை சென்றாலும், கதிர்காமத்துக்கு யாத்திரை செல்லாமல் எந்தவொரு யாத்திரையும் முழுமையடையாது என, திருவிளையாடல் புராணத்தில் சூத முனிவர் கூறியுள்ளார். இது பற்றி 'கதிர்காம கிரிப்படலம்' எனும் தலைப்பில் நூலொன்று எழுதப்பட்டது. அந்த நூலை நான் மீள்பதிப்பு செய்திருக்கிறேன்," என்கிறார் ஜீவராஜா.
கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கான பாதயாத்திரை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அநேகமாக இந்து கோயில்கள் கிழக்கு அல்லது வடக்கை நோக்கி அமைந்திருந்திருக்கும். ஆனால், கதிர்காமம் முருகன் கோயில் தெற்குத் திசை நோக்கி இருப்பதாகவும் ஜீவராஜா கூறினார்.
பழனியில் முருகன் சிலையை அமைத்த போகர் மாமுனிவர், கதிர்காமத்துக்கு வந்ததாகவும் அவர் முருகனைத் தியானித்து கதிர்காமத்தில் நீண்ட காலம் இருந்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் திருவிழாவுக்கான கொடியேற்றம், அங்கு அமைந்துள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றிலேயே இடம்பெறுவதாகவும் இங்கு பல்லின மக்களும் வருகை தருவதாகவும் ஜீவராஜா விவரித்தார்.
"கந்தபுராணத்தில் குறிப்பிடப்படும் சூரன் போர், கதிர்காமத்திலிருந்து சிறிது தூரத்திலேயே நடந்ததாகக் கூறப்படுகிறது. சூரனை வென்ற பின்னர் அங்குள்ள கங்கைக் கரையில் முருகனை வைத்து தேவர்களும் முனிவர்களும் வழிபாடு செய்ததாகவும் கதிர்காமம் முருகன் கோயிலின் தோற்றுவாய் அங்கிருந்தே உருவானதாகவும் புராணங்கள் கூறுகின்றன," என்கிறார் ஜீவராஜா.
இலங்கையின் தமிழ் மன்னன் எல்லாளனுடன், சிங்கள மன்னன் துட்டகெமுனு (அல்லது துட்டகைமுனு) போர் புரிவதற்கு முன்னர், துட்டகெமுனு கதிர்காமம் சென்று முருகனை வணங்கி நேர்ச்சை செய்ததாகவும் பின்னர் போரில் வென்ற துட்டகெமுனு, கதிர்காமம் கோயிலுக்கு பல்வேறு உதவிகளையும் அன்பளிப்புகளையும் வழங்கியதாகவும் வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. துட்டகெமுனு மன்னன் கி.மு 161 முதல் 137 வரை, அனுராதபுரத்தை ஆட்சி செய்தார்.
உதவிக்கான கோரிக்கை
தற்போது கதிர்காமம் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தமக்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாக பிரஸ்திகாவின் தாய் சரண்யா கூறுகிறார்.
பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் பெருமாள் பார்த்திபன், செவ்வாய்க்கிழமைன்று (19) குழந்தைக்குத் தேவையான பால்மா மற்றும் உணவுகளையும், இவர்களுக்குப் பண உதவியையும் வழங்கியதாக சரண்யா தெரிவித்தார்.
இதேவேளை, குழந்தை பிரஸ்திகாவுக்கு அதிகளவிலான மருத்துவச் செலவுகள் உள்ளதாகவும் அவற்றை ஈடு செய்ய முடியாதுள்ளதாகவும் கூறும் தாய் சரண்யா, மனித நேயமுள்ளவர்களிடமிருந்து உதவிகளைத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கோரிக்கை விடுக்கின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்