இலங்கை நெருக்கடி: குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? - அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து
இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய அதிபரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், யார் அதிபராவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இலங்கையின் அரசியல் சட்டப்படி, தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றம்தான் புதிய அதிபரைத் தேர்வு செய்யப்போகிறது. ஆனால் அதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்ற தெளிவான முடிவு கிடைக்காத நிலையில், குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்வு செய்யும் சூழல் ஏற்படும்.
அதிபர் பதவிக்கான வேட்பு மனுக்கள் வரும் 19-ஆம் தேதி பெறப்படுகிறது. 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும். அன்றே யார் அதிபர் என்பது தெரிந்துவிடும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் அதிபர் பதவியில் இருந்து விலகி அதன் பிறகு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த வாக்கெடுப்பில் போட்டி இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. தற்போது அதிபரின் பொறுப்புகளை தற்காலிகமாக மேற்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த டலஸ் அழகம்பெரும உள்ளிட்ட பலர் இதில் போட்டியிடுவார்கள் என்பது தெரியவருகிறது.
இலங்கை அரசியல் சட்டப்படி இடைக்காலத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்படும் அதிபர், முந்தைய அதிபரின் பதவிக் காலத்தை நிரப்பும் வகையிலேயே செயல்படப் போகிறார். அதனால் முழு பதவிக் காலமும் புதிய அதிபருக்குக் கிடைக்காது.
அதிபர் பதவி காலியானது முதல் ஒரு மாதத்துக்குள்ளாக புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று இலங்கை அரசியல் சட்டம் கூறுகிறது. இந்த நடைமுறைகள்தான் இப்போது தொடங்கியிருக்கின்றன.

அதிபர் தேர்வுக்கான வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?
அறிவிக்கப்பட்டபடி வரும் 20-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்குப்பெட்டி வைக்கப்படும். பின்னர் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் அழைத்து அவர்களுக்கு நாடாளுமன்ற தலைமைச் செயலாளர் வாக்குச் சீட்டு ஒன்றை அளிப்பார். இதில் வேட்பாளர்கள் பெயர்களும் அவற்றுக்கு எதிரே கட்டங்களும் இருக்கும்.
இந்த வாக்கெடுப்பு விருப்ப வாக்கு முறையில் (Preferential voting) நடக்கும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிடும்போது ஒவ்வொருக்கும் ஒன்று முதல் எண்கள் முறையில் வரிசைப்படுத்தி விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் எந்த வேட்பாளர் அதிபராக வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவரது பெயருக்கு நேரே உள்ள கட்டத்தில் ஒன்று எனக் குறிப்பிட வேண்டும். இதேபோல அடுத்தடுத்த விருப்பங்களை இரண்டு, மூன்று என வரிசைப்படுத்த வேண்டும்.
ராமசாமி, குப்புசாமி என இருவர் போட்டியிடுகிறார்கள் என்றால் ராமசாமிக்கு 1 என்றும் குப்புசாமிக்கு 2 என்றும் தனது விருப்பத்தேர்வை அளிக்கலாம். இதற்கு என்னவென்றால், ராமசாமி தனது முதல் விருப்பம் என்றும் குப்புசாமி இரண்டாவது விருப்பம் என்பதும் இதற்குப் பொருள்.
வாக்குப் பதிவு முடிந்த பிறகு ஒன்று என்ற விருப்பத் தேர்வின் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படும். 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால் அவரே அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.
மாறாக யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்க வில்லை என்றால், குறைந்த எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். அவரது வாக்குகளில் இரண்டாவது விருப்பத் தேர்வு யாருக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் அந்த வாக்குகள் மற்றவர்களுக்குப் பிரித்து அளிக்கப்படும்.
அதனால் ஒரே ஒரு முறை அளிக்கப்பட்ட வாக்குகள் அடுத்தடுத்த சுற்றுகளாக எண்ணப்படும்.

பட மூலாதாரம், PM Office
எப்போது குலுக்கல் முறையில் அதிபர் தேர்வு செய்யப்படுவார்?
விருப்பத் தேர்வு முறையின் இறுதியில் வாக்குகள் எண்ணப்படும்போது 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
அப்படி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றவர் அதிபராகத் தேர்வு செய்யப்படுவார்.
ஒருவேளை வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டும அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைத்து சமநிலை ஏற்பட்டால் குலுக்கல் முறையில் அதிபர் தேர்வு செய்யப்படுவார். அதாவது சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அதிலிருந்து ஒருவரை அதிபராகத் தேர்வு செய்யும் நிலை ஏற்படும்.
"இதுவரை இலங்கை வரலாற்றில் யாரும் குலுக்கல் முறையில் அதிபராகத் தேர்வு செய்யப்படவில்லை. இந்த முறையும் அப்படி நடப்பதற்கான வாய்ப்புக் குறைவுதான்" என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் நாள்தோறும் புதிய திருப்பங்களைக் காண்டும் இலங்கை அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவும் பல முனைப் போட்டியாக அதிபர் தேர்தல் மாறும் சூழலில் இது நடக்கவே நடக்காது என்று உறுதியாகக் கூற முடியாது.
அப்படியொரு சூழல் ஏற்படக்கூடும் என்றுதான் இலங்கையின் அரசியல் சட்டமே குலுக்கல் முறையில் அதிபர் தேர்ந்தெடுக்கும் முறையை வரையறுத்திருக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












