இலங்கை நெருக்கடி: அதிகாரத்தைப் பெற எனக்கு ஆர்வமில்லை - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

(இன்றைய (ஏப்ரல் 14) இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்)

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை எனவும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருப்பதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, விசேட அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுக்கையில்,

அரசாங்கம் உட்பட நாட்டுக்கு அழிவை ஏற்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் இன்றைய கருத்து. பொதுமக்கள் தமது குறைகளுக்கு தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர் என்றார்.

உண்மைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை எனவும்,மக்களின் ஆணைக்கு தலைவணங்குவேன் என்றும் தெரிவித்தார்.

"அரசின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு, போராட்டத்தின் வெற்றி"

அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதாக 'தமிழன்' செய்தி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது..

தனது ஃபேஸ்புக் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்தார். அதில் அவர், "பேச்சுவார்த்தை என்பது ஒரு முக்கிய உத்தி என்பதால் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அதை நிராகரிக்க கூடாது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதுவருடப்பிறப்பிலும் போராட்ட களத்தில் இலங்கை மக்கள்

இன்று தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் சித்திரைப் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் வேளையிலும் இலங்கையில் மக்கள் போராட்டம் தொடர்கின்றது என்று 'வீரகேசரி' செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு - காலி முகத்திடலில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசு பதவி விலகுமாறு வலியுறுத்தி தொடங்கிய மக்கள் எழுச்சிப் போராட்டம் தமிழ் சிங்கள புது வருடப்பிறப்பு தினமான இன்றும் 6ஆம் நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், போராட்ட களத்தில் புதுவருட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அரசாங்கம் பேசுவதற்கு தயாராக இருக்கின்றது என்று கோரிக்கை விடுத்த போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்த கோரிக்கைக்கு செவிமடுக்காது, ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது என சில கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகின்றனர்.

தமிழக ஆளுநர் தேநீர் விருந்து: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து கொடுக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த விருந்தில் பங்கேற்க போவதில்லை என சில தமிழகக் கட்சிகள் அறிவித்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாகவுள்ளது. நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் கடத்தும் நிலையில் அவர் அழைப்பை எங்ஙனம் ஏற்க இயலும்? என்று கேள்வி எழுப்பி, தேநீர் விருந்து அழைப்பை விசிக புறக்கணிக்கிறது என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் துணைவேந்தர் நியமன பிரச்சனை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்பதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தெரிவித்துள்ளது.

"தொடர்ந்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கும் என முடிவு செய்துள்ளது" என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :