இலங்கை நெருக்கடி: எரிபொருள் வாங்க மனைவியை நிறுத்தி விட்டு, தொழிலுக்கு செல்லும் மீனவர்கள்

இலங்கை
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, இலங்கையில் இருந்து பிபிசி தமிழுக்காக

''மனைவியை வரிசையில் நிறுத்தி விட்டே நாங்கள் கடலுக்கு செல்கின்றோம். மனைவி வரிசையிலிருந்து எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை என்றால், அடுத்த நாள் கடலுக்கு எம்மால் செல்ல முடியாது" என்கின்றார் நீர்கொழும்பு மீனவர் பெட்ரி. என்ன நடக்கிறது இலங்கையில்?

இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி இன்று, இலங்கை வாழ் அனைத்து மக்களையும் மிக பாரியளவில் பாதித்துள்ளது.

இந்த கடும் பொருளாதார நெருக்கடிகள் இன்று சிறு குழந்தை முதல் முதியோர் வரை எவரையும் விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில், கொழும்பை அண்மித்துள்ள மீனவ சமூகம் எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்கள் குறித்து, பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

அனைத்து பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இலங்கையில், பிரதான தொழிலாக மீனவத் தொழில் காணப்படுகின்றது.

2021ம் ஆண்டு மீன்பிடி ஏற்றுமதி வருமானமாக 287 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தொகையை உழைத்து கொடுத்துள்ளது.

அதிலும், இறால் தொழில்துறை 181 வீத வளர்ச்சியை எட்டியதாக கடற்றொழில் அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நெருக்கடி தாக்கத்தை அனுபவிக்கும் மீனவர்கள்

இலங்கையில் மீன்பிடித்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக, கடந்த ஆண்டு தகர பெட்டிகளில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதி 68 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

இலங்கை
படக்குறிப்பு, ஜுட்

இவ்வாறு இலங்கையின் மீன்பிடித்துறை பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்த சூழ்நிலையில், தற்போது நாட்டின் பொருளாதார நெருக்கடி அந்த மீனவ சமூகத்தை நேரடியாகவே பாதித்துள்ளது.

எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருவதையும் காண முடிகின்றது.

அத்துடன், இலங்கையில் ஏற்படுத்தப்படுகின்ற தொடர் மின்சார தடை காரணமாக, பிடிக்கப்படும் மீன்களை பாதுகாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், தாம் தொடர்ச்சியாகவே பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த மீனவர்கள், தாம் எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்கள் குறித்து பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தனர்.

தான் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மீன் விற்பனையில் ஈடுபடும் ஜுட் கருத்து தெரிவித்தார்.

''முன்னரை போன்று தொழில் செய்ய முடியவில்லை. பொருட்களை வாங்க வருவோர் குறைவடைந்துள்ளனர். மக்கள் அனைவரும் வரிசைகளில் நிற்கின்றார்கள். இந்த மீன்களை குளிர்சாதனபெட்டியில் வைப்பதற்கு மின்சாரம் இல்லை. மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு எரிபொருள் இல்லை. வட்டிக்கு பணத்தை வாங்கியே தொழிலை செய்கின்றோம். உழைக்கும் பணத்தை வட்டிக்கு செலுத்திவிடுவோம். வாழ்க்கை கடனிலேயே செல்கின்றது. வேறு தீர்வு இல்லையே. மின்சாரம் இல்லாததால், ஐஸ் கட்டிகளை போட்டு மீன்களை பாதுகாக்க முயற்சிப்போம். ஆனால் விரைவில் பழுதடைந்து விடும். குறைந்த விலையிலேயே விற்பனை செய்ய வேண்டியுள்ளது" என அவர் கூறினார்.

எரிபொருள் வரிசையில் மனைவி

இலங்கை
படக்குறிப்பு, பெட்ரி

படகுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள மனைவியை வரிசையில் நிறுத்தி விட்டே, தாம் கடலுக்கு செல்வதாக மீனவரான பெட்ரி தெரிவிக்கின்றார்.

''இந்த பிரச்சினை அனைவரையும் பாதித்துள்ளது. மின்சாரம் இல்லை. மின்சாரம் இல்லாமையினால், மீன்களை பாதுகாக்க முடியாது. இந்த மீன்களை விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த மீன்களை கருவாடு செய்ய வேண்டும். அவ்வாறு கருவாடு செய்தாலும், எமக்கு நட்டம் தான் ஏற்படும். நாம் கடலுக்கு படகுகளில் செல்கின்றோம். படகுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள மனைவியை வரிசையில் நிறுத்தி விட்டே நாங்கள் கடலுக்கு செல்கின்றோம். மனைவி வரிசையிலிருந்து எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை என்றால், அடுத்த நாள் கடலுக்கு எம்மால் செல்ல முடியாது" என மீனவரான பெட்ரி தெரிவித்தார்.

இலங்கை
படக்குறிப்பு, மேரி மோனிகா

பெருமளவான பணம் தேவைப்படுகின்ற போதிலும், வருமானம் மிக குறைவாகவே காணப்படுவதாக மீனவ சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான மேரி மோனிகா குறிப்பிடுகின்றார்.

''எனக்கு மருந்து வாங்குவதற்கு மாதமொன்றுக்கு 3000 ரூபா தேவைப்படுகின்றது. ஆனால் நாள் ஒன்றுக்கு 700 அல்லது 800 ரூபாவே உழைக்க முடிகின்றது. அதிலும் தேவையான பொருட்களை வாங்கினால், மிகுதி ஒன்றும் இல்லை. பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல வேண்டும். புத்தகங்களை வாங்க, ஆடைகளை வாங்க என பெருமளவான பணம் தேவைப்படுகின்றது" என மேரி மோனிக்கா தெரிவிக்கின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: