You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை அரசமைப்பில் சட்டத்திருத்தம்: ஜனாதிபதிக்கான அதிகாரம் மீண்டும் வலுக்கிறது
இலங்கை அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான 20ஆவது சட்டமூலத்தை நேற்று வியாழக்கிழமை அரச வர்த்தமானியில் நீதியமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின் பிரகாரம், 19ஆவது திருத்தத்தில் இடம்பெற்றிருந்த பல்வேறு விடயங்கள் இல்லாதொழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30க்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் 20ஆவது திருத்தத்தின் மூலமாக நீக்கப்படவுள்ளது.
இதன்படி எத்தனை பேரையும் அமைச்சர்களாக நியமிக்கும் அதிகாரம் 20ஆவது திருத்தச் சட்டத்தின் வழியாக ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ளது.
மேலும் ஜனாதிபதி தனக்கென்று எவ்விடயத்தையும் அல்லது எப்பணியையும் குறித்தொதுக்கலாம் என்பதோடு, அமைச்சுப் பொறுப்புக்களையும் தன்வசம் வைத்திருக்க முடியும் என 20ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 19ஆவது திருத்தத்தில் - அந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது பதவியில் இருந்த ஜனாதிபதியைத் தவிர, அடுத்துவரும் ஜனாதிபதியெவரும் அமைச்சுப் பொறுப்புகள் எவற்றினையும் தன்வசம் வைத்திருக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் ஆகக்குறைந்தது 30 வயதை நிறைவு செய்திருத்தல் வேண்டும் என 19ஆவது திருத்தத்துக்கு முன்னர், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதும், 19ஆவது திருத்தத்தின் மூலம் அந்த வயதெல்லை 35 என மாற்றப்பட்டது. தற்போது 20ஆவது திருத்தத்தின் வழியாக குறித்த வயதெல்லை மீண்டும் 30 என மாற்றப்பட்டுள்ளது.
இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் 20ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது.
நாலைரை வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் நாடாளுமன்றம் ஒன்றினை, ஜனாதிபதி கலைக்க முடியாது என 19ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள விடயம், 20ஆவது திருத்தத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர், எச்சந்தர்ப்பத்திலும் அதனை கலைப்பதற்கான அதிகாரம், 20ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதம மந்திரியை நீக்குவதற்கான நேரடி அதிகாரம் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இல்லாமல் செய்யப்பட்டுள்ள போதும், அந்த அதிகாரத்தை 20ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.
ஜனாதிபதியொருவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது என 19ஆவது திருத்தத்துக்கு முன்னர் அரசியலமைப்பில் காணப்பட்ட சட்ட ஏற்பாடு, 20ஆவது திருத்தத்தின் வழியாக மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேற்முறையீட்டு நீதிமன்ற தலைவர் மற்றும் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தையும் ஜனாதிபதிக்கு 20ஆவது திருத்தம் வழங்கியுள்ளது.
10 பேரைக் கொண்ட அரசியலமைப்பு பேரவை இல்லாமல் செய்யப்பட்டு அதற்குப் பதிலாக ஐவரைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை 20ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பிரதிநிதிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ள போதும், நாடாளுமன்றப் பேரவையில் சிவில் சமூக உறுப்பினர்களுக்கான இடம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, 19ஆவது திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களில் பலவற்றினை 20ஆவது திருத்தத்திலும் காண முடிகின்றது. ஆனால், தேசிய கொள்கை வகுப்பு ஆணைக்குழு மற்றும் கணக்காய்வு ஆணைக்குழு ஆகியவை 20ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு 20ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு விடயங்கள் நீக்கப்பட்டுள்ள போதும், சில விடயங்கள் தொடர்ந்தும் தக்க வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 19ஆவது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அதேபோன்று, ஜனாதிபதியினதும் நாடாளுமன்றத்தினதும் பதவிக்காலம் 05 வருடங்கள் என 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
இரண்டு தடவை ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் மற்றொரு தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று, 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்திலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நீதியமைச்சர் அலி சப்றி சமர்ப்பித்த போது, அதற்கான அங்கீகாரம் கிடைத்திருந்தது.
இதேவேளை, அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்றும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான நிபுணர்கள் குழுவொன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோஹர டி சில்வா, சஞ்ஜீவ ஜயவர்த்தன, சமந்த ரத்வத்த, பேராசிரியர்களான நாஸீமா கமறுத்தீன், வசந்த செனவிரத்ன, ஜி.எச். பீரிஸ் மற்றும் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- கடனுக்கு பாலியல் சேவை: விபசார கும்பலின் நூதன அறிவிப்பு
- நடிகை கங்கனாவின் சர்ச்சை கருத்து: "மும்பையில் வாழ உரிமை கிடையாது" - மிரட்டும் தலைவர்கள்
- விடுதலைப்புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்: மகாதீர் வலியுறுத்தல்
- ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ஹர்பஜன் சிங் - காரணம் என்ன?
- "சிங்கம்" பட ஹீரோ போல இருக்காதீர்கள் - ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு பிரதமர் மோதி அறிவுரை
- காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் விபத்து - 7 பெண்கள் பலி
- இலங்கை கப்பல் தீயை அணைக்க தீவிர முயற்சி: எரிபொருள் கசிவு ஏற்பட்டால் பேராபத்து
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: