ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ஹர்பஜன் சிங் - காரணம் என்ன?

இந்திய பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக பிரபல சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவரே தமது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகுவதாக அறிவித்த நிலையில், ஹர்பஜன் சிங் விலகியிருக்கிறார். அவரது விலகல் அறிவிப்பு சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டு விளையாட முடியவில்லை. இது சோதனையான காலகட்டம். எனது தனிமைக்கு மதிப்பளிக்கப்படுவது முக்கியம். எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் இந்த முடிவு அவர் அங்கம் வகித்த சென்னை சூப்பர் கிங்க் அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனிடம் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்புதான் சிஎஸ்கே அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகுவதாக அறிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டிக்காக வீரர்கள் சென்ற நிலையில், சமீபத்தில் ஒரு வீரர் மற்றும் 13 ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. பிறகு இரு வீரர்கள் நீங்கலாக மற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்தது.

பாதிக்கப்ப்டட இரு வீரர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் சிகிச்சை முடிந்து மறுபரிசோதனைக்கு பிறகு ஆட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து வெளியேறியது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் ஊடக தகவல்கள் வெளியாகின. துபை சென்ற அவர் தாயகத்துக்கு திரும்பி விட்ட நிலையில், தொடக்கம் முதலே ஹர்பஜன் சிங் இந்தியாவிலேயே தங்கியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சிஎஸ்கே அணி நீங்கலாக மற்ற அனைத்து அணியினரும் வலை பயிற்சியில் ஈடுபடத்தொடங்கினார்கள். எஞ்சிய சிஎஸ்கே வீரர்கள் இன்று பயிற்சியை தொடங்கினார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: