You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 55.
செவ்வாய் இரவு வரை, அவரது இறப்புக்கான காரணம் அலுவல்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கொழும்பிலுள்ள தனது வீட்டில் சுகயீனற்ற நிலையில், தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே காலமானதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.
இந்தியாவுக்கான இலங்கை தூதர் கோபால் பாக்லேவை ஆறுமுகன் தொண்டமான் இன்று சந்தித்ததாக, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகன் தொண்டமான் யார்?
1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.
ஆறுமுகன் தொண்டமான், 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார்.
1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றிய அவர், 1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றப் பிரவேசத்தை பெற்ற அவர், தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களின் வெற்றியீட்டியிருந்தார்.
பல அமைச்சு பதவிகளை வகித்த அவர், தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சு பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: