‘இலங்கை ராணுவத்தை நிர்க்கதிக்குள்ளாக்கும் செயல்பாடுகளுக்கு இடமளிக்க போவதில்லை’ - கோட்டாபய ராஜபக்ஷ

பாரிய அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்ட இலங்கை ராணுவத்தை தேவையற்ற விதத்தில் நிர்க்கதிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ நினைவு தூபிக்கு முன்பாக நடத்தப்பட்ட ராணுவ வெற்றியின் தேசிய விழாவில் இன்று (மே 19) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். உலகிலுள்ள வல்லரசுகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாடுகளின் தலைவர்கள் கூட, தமது நாட்டு ராணுவத்திற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க இடமளிப்பதில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவ்வாறான நிலையில், சிறிய நாடான இலங்கையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தை தேவையற்ற விதத்தில் நிர்க்கதிக்குள்ளாக்கும் செயற்பாடுகுளை முன்னெடுக்க தான் இடமளிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையை நிர்க்கதிக்குள்ளாக்கும் விதத்தில் ஏதேனும் சர்வதேச நிறுவனமோ அல்லது அமைப்பொன்றோ தொடர்ச்சியாக செயற்படுமாக இருந்தால், அந்த நிறுவனம் அல்லது அமைப்பின் அங்கத்துவத்திலிருந்து இலங்கையை விலகிக் கொள்ள தான் பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

ராணுவத்தில் 20 வருடங்கள் சேவையாற்றியவர் என்ற விதத்திலும், ஒரு தசாப்தம் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியவர் என்ற விதத்திலும், நாட்டின் பிரஜை என்ற விதத்திலும் இலங்கை ராணுவம் ஆற்றிய அர்ப்பணிப்பு தொடர்பில் தான் நன்கறிவதாக ஜனாதிபதி கூறினார்.

இலங்கை மக்களுக்கு சமாதானத்தையும், நிம்மதியையும் பெற்றுக்கொடுத்த ராணுவத்திற்கு கிடைக்க வேண்டிய கௌரவத்தை இல்லாதொழிக்க தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என அவர் தெரிவித்தார்.

நாட்டில் சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒரேவிதத்தில் வாழ்வதற்கான உரிமையை கொண்டுள்ளதாகவும், இனவாதிகளுக்கு இலங்கையிலுள்ள அனைவரையும் பிரிப்பதற்கான தேவையே காணப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இனவாதிகளின் நோக்கங்கள் நிறைவேறும் பட்சத்தில், எமது வரலாறு மாற்றம் பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் ஊடாக மக்கள் அச்சமின்றியும், சந்தேகமின்றியும் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டதுடன், தமது மனித உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதற்கான இயலுமை கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

30 வருடங்களின் பின்னர் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்குமான இயலுமை கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார். யுத்தம் என்பது ரோஜா பூக்களுடனான படுக்கை கிடையாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

இந்நிலையில், சட்டத்தை பின்பற்றாத உலகிலேயே மிக மோசமான பயங்கரவாத குழுவுடன் மோதலில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் ராணுவத்தினர் பல்வேறு மோசமான அனுபவங்கள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொண்டிருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

30 வருடங்கள் நாட்டின் அனைத்து பாகங்களிலும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும், தற்கொலை குண்டுத்தாரிகள் பஸ்கள், ரயில்கள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்து இடங்களிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதனூடாக பெருமளவிலான உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டதுடன், பெருமளவிலான சொத்துக்களும் சேதமடைந்திருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார். இந்த நிலையில், இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் வகையிலேயே மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனாலேயே, ஒன்றிணைந்த நாட்டில் இன்று சுதந்திரமாகவும், சமாதானமாகவும் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: