இலங்கை அரசியல்வாதி எராஜ் ரவீந்திர பெர்ணாண்டோவுக்கு 5 ஆண்டு சிறை: போலி துப்பாக்கி ஏந்திய வழக்கு

ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்ணான்டோவிற்கும் மற்றொ நபருக்கும்5 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தினால் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அங்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
அந்தக் கண்காணிப்பில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஹம்பாந்தோட்டையில் பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
ஹம்பாந்தோட்டை மாத்தளை விமான நிலையம் மற்றும் துறைமுகங்களை கண்காணிக்க ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்த தருணத்தில், ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்ணான்டோ கைத்துப்பாக்கியொன்றை ஏந்தியவாறு சம்பவ இடத்திற்கு வந்த காட்சி சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் அப்போது பெரிதாக பேசப்பட்டது.
இது குறித்த போலீஸ் விசாரணையின்போது, ரவீந்திர பெர்ணாண்டோ எடுத்து வந்த துப்பாக்கி போலியானது என தெரியவந்தது.
எனினும், சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் வழக்கையும் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வர் உள்ளிட்ட இருவருக்கு 5 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் தலா 1,30,000 வீதம் 2,60,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நட்டஈட்டு தொகையாக, குற்றவாளிகள் ஒவ்வொருவரும் 65 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலும் 6 மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏனைய மூன்று சந்தேக நபர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












