You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவாக சட்டம்: மாற்றம் செய்ய இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம்
இலங்கையில் முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஒன்று கூடி, இந்த விடயத்தில் இணக்கம் கண்டதோடு, பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா பிபிசி யிடம் கூறினார்.
இதற்கிணங்க முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில், ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயதை 18 ஆக அதிகரித்தல், திருமண பதிவுப் பத்திரத்தில் மணமகளின் கையைழுத்தை கட்டாயமாக்குதல் மற்றும், எதிர்காலத்தில் பெண் காஸி நீதவான்களை நியமிக்கும் போது, உயர் கல்வித் தகைமையை கொண்டவர்களை அந்தப் பதவிக்காக நியமித்தல் ஆகிய விடயங்களை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.
இலங்கையில் இதுவரையில் காஸி நீதவான்களாக பெண்கள் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1951ம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், பெண்ணுக்கான திருமண வயது 12 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை 18 வயதாக திருத்துவதற்கு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.
இதேவேளை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளை, நீதியமைச்சரிடம் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பைசர் முஸ்தபா கூறினார்.
இஸ்லாமிய விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பெண்ணின் திருமண வயது உள்ளிட்ட சில விடயங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது.
இலங்கையில் பொதுச் சட்டத்துக்கு அப்பால் கண்டியச் சட்டம், தேச வழமைச் சட்டம் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் ஆகியவையும் அமலில் உள்ளன. இவற்றில் முஸ்லிம் தனியார் சட்டத்தினுள் முஸ்லிம்களின் விவாகம் மற்றும் விவாக ரத்துச் சட்டம் அடங்கியுள்ளது.
இந்த நிலையில் "இலங்கையின் பொதுச் சட்டத்தில் 1995ம் ஆண்டு 18ம் இலக்க திருத்தத்தின் மூலம்தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயது 18 என்ற எல்லை நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்னர் 1907ம் ஆண்டில் 17ம் இலக்க திருமண மற்றும் விவாகரத்து கட்டளைச் சட்டதின் 15ம் ஷரத்தில், ஆணின் திருமண வயது 16 என்றும் பெண்ணின் திருமண வயது 12 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண சட்டமும் அதே வயதெல்லையை மாற்றாமல் கொண்டுள்ளது" என்று சூறா கவுன்சில் செயலாளரும் இஸ்லாமிய அறிஞருமான இனாமுல்லா மஸிஹுத்தீன் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறாயினும், இஸ்லாமிய விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பெண்ணின் திருமண வயதினை 18ஆக நிர்ணயம் செய்வது பொருத்தமானது என்றும் பிபிசி தமிழிடம் இனாமுல்லா கூறினார்.
"உடல் ரீதியாக பெண் முதிர்வடைதல் (பூப்படைதல்) என்பதும், சுயமாக முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் மன முதிர்வடைதல் என்பதும் வெவ்வேறான விடயங்களாகும். அதேவேளை மனம் முதிர்ச்சியடையும் வயது எது என்பதிலும் கேள்விகள் உள்ளன. எவ்வாறாயினும் இலங்கையில் 18 வயதை அடைந்தவுடன் ஒருவர் சுயமாக முடிவுகளை எடுக்க முடியும் என்று சட்டம் கூறுகின்றது. அந்த வகையில் அதையே நாம் மன முதிர்ச்சி வயதாக எடுத்துக் கொள்ளலாம். எனவேதான், இஸ்லாமிய விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பெண்ணின் திருமண வயதாக 18 ஐ நிர்ணயிக்கலாம் என்று நான் கூறுகின்றேன்" என்று இனாமுல்லா விவரித்தார்.
அதேவேளை, பெண்ணொருவர் தனது திருமணம் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, சட்ட ரீதியான நிவாரணங்களை சுயமாக பெற்றுக் கொள்வதென்றால், அவர் 18 வயதை அடைந்திருத்தல் வேண்டும் என்பதையும், இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
எது எவ்வாறாயினும், முஸ்லிம் தனியார் சட்டம், முஸ்லிம்களின் ஆடை முறைமை, உணவுப் பழக்கவழக்கம், மதரஸா அமைப்பு மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென, முஸ்லிம்கள் அல்லாதோர் அழுத்தங்களைப் பிரயோகிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இஸ்லாமிய அறிஞர் இனாமுஸ்லா மஸிஹுத்தின் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று, இவ்வாறான விடயங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, உலமா சபையிடமும், இஸ்லாமிய அறிஞர்களிடமும் முன்னதாக கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில், முஸ்லிம்களுக்கென தனியார் சட்டம் இருப்பதற்கு எதிராகவும், அதனை இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறியும், பௌத்த பிக்குகளும், சிங்கள அமைப்புக்களும் சில காலமாக ஆர்ப்பாட்டங்களையும், கவன ஈர்ப்பு போராட்டங்களையும் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்