You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க அமெரிக்காவிடம் கோரும் முன்னாள் போராளிகள்
அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
மாறிவரும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான க.துளசி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், இலங்கையின் தென் பகுதியில் அரசியல் காய்நகர்த்தல்கள், அரசியலமைப்பின் பொறிமுறை மற்றும் தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசியலமைப்பு பொறிமுறைகளில் தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்கள் குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக க.துளசி குறிப்பிடுகின்றார்.
இந்தியாவின் தலையீட்டில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்ட ஏற்பாட்டு நடைமுறைகள் மற்றும் புரையோடிப் போயிருக்கின்ற தமிழர்களின் இனப் பிரச்சனைகளுக்கான தீர்வு ஆகியன குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் குறுக்கிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், இந்த விடயத்தை கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்