You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மு.க. ஸ்டாலின் இலங்கைக்கு வருகை தர வேண்டும்' - சி.வி.விக்னேஸ்வரன்
இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கைக்கு வருகை தர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்தில் மேற்படி அழைப்பினை விக்னேஸ்வரன் விடுத்துள்ளார்.
நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியை அபார வெற்றிக்கு வழிநடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என விக்னேஸ்வரன் எழுதியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மென்மேலும் வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து தமிழகத்துக்கும் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ளும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
"இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டபோது திராவிட முன்னேற்ற கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் எமது மக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும் கசப்புணர்வும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்," என தெரிவித்துள்ளார் விக்னேஸ்வரன்.
இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் எமது மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை நீங்கள் எதிர்காலத்தில் முன்னெடுப்பீர்கள் என்று நம்புவதாகவும் இதற்கு தன்னாலான சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
"எமது மக்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்வதற்காகவும் எவ்வாறு தமிழகத்துக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தலாம் என்று ஆராய்வதற்காகவும் நீங்கள் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்" என அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்