இலங்கையில் சஹ்ரான் குழுவினர் பயிற்சி பெற்ற இடம் முற்றுகை

இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபர்கள், பயிற்சி பெற்றதாக நம்பப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடமொன்றினை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் முற்றுகையிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை - ஒல்லிக்குளம் எனும் பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான இடமொன்றே, இவ்வாறு முற்றுகையிடப்பட்டது.

ஒல்லிக்குளம் - மதுராபுரத்துக்குச் செல்லும் வீதியிலுள்ள இடமொன்றில் இந்த இடம் அமைந்துள்ளதாக, காத்தான்குடி போலீஸார் தெரிவித்தனர்.

மேற்படி இடம் - யாசீன் பாவா அப்துல் ரஊப் என்பவருக்குச் சொந்தமானது என்றும், குறித்த நபரை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது கிடைத்த தகவல்களுக்கு அமைய, இந்த முற்றுகை நடத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுவெடிப்பில் பலியான சஹ்ரானின் சகோதரர் ரிஸ்வான் என்பவர், 2017ம் ஆண்டு இந்த இடத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றார் என்றும், அதன் போது தவறுதலாக இடம்பெற்ற குண்டுவெடிப்பில், கை விரல்களையும், கண் ஒன்றினையும் ரிஸ்வான் இழந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இந்த இடத்திலிருந்தே தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான பயிற்சிகள் பெறப்பட்டிருக்கக் கூடும் எனவும் போலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக நம்பப்படும் மேற்படி இடத்தை, மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலீஸ் அத்தியட்சகர் ஏ. குமாரசிறி மற்றும் காத்தான்குடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மாலை சென்று பார்வையிட்டனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :