இலங்கை நிழலுலக தாதா மாகந்துர மதுஷ் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரும், இலங்கையின் பிரபல நிழலுலக தாதாவுமான மாகந்துர மதுஷ், துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 226 விமானத்தின் மூலம் துபாயிலிருந்து இன்று நாடு கடத்தப்பட்டார்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட மாகந்துர மதுஷ், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 5 மணிக்கு வந்தடைந்துள்ளார்.

நாடு கடத்தப்பட்ட மாகந்துர மதுஷை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலை சம்பவங்கள் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மாகந்துர மதுஷ் தேடப்பட்டு வந்திருந்தார்.

இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற மாகந்துர மதுஷ், துபாயில் மறைந்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி துபாயில் இடம்பெற்ற விருந்துபசாரமொன்றின் போது, மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையில் பிரபல்யமான பலரும் இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

துபாயில் கைது செய்யப்பட்டவர்கள் கட்டகட்டமாக நாடு கடத்தப்பட்டதுடன், அவர்களில் சிலர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், சிலர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட அதேவேளை, சிலர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த பின்னணியிலேயே, நிழலுலகத் தலைவரும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்பட்டார்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் கடத்தலுடன், மாகந்துர மதுஷ் நேரடி தொடர்பை பேணி வந்தமையும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :