இலங்கை குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் உள்பட 6 பேரின் படங்கள் வெளியீடு

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களின் புகைப்படங்களை போலீசார் இன்று வெளியிட்டனர்.

பட மூலாதாரம், போலீஸ் ஊடகப் பிரிவு
அப்துல் காதர் பாஃதீமா காதியா என்ற பெண்ணுடையது என தெரிவித்து, அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படம், அவருடையது அல்லவென போலீசார் கூறியுள்ளனர்.
அந்த புகைப்படத்திலுள்ள பெண் எனக் கூறிக் கொள்ளும் அமாரா மஜீத் என்ற பெண் தனது பேஸ்புக் கணக்கில் குறித்த விடயம் தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இது முழுமையாக தவறான ஒரு அடையாளப்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த சந்தேகநபர்களை அடையாளம் காணும் நோக்கிலேயே இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகளின் ஊடாக இந்த சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

பட மூலாதாரம், போலீஸ் ஊடகப் பிரிவு

பட மூலாதாரம், போலீஸ் ஊடகப் பிரிவு
இந்த சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக 071 8501771, 011 2422176 மற்றும் 011 2395605 ஆகிய மூன்று தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
''பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்''
பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கும், பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்க அனைத்து கட்சித் தவைலர்களும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கூடிய அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், அனைத்து கட்சித் தலைவர்கள் இன்றைய தினம் முதல் தடவையாக கூடி, விடயங்களை ஆராய்ந்திருந்தார்கள்.
ஒன்றிணைந்த பாதுகாப்பு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஆரம்பிக்கப்படும் ஒன்றிணைந்த பாதுகாப்பு நிலையத்தின் ஊடாக, அனைத்து பாதுகாப்பு செயற்பாடுகளும் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு அனைத்து கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை வைத்து, அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன்போது கருத்துக்களை தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தவைவர் மஹிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொண்டனர்.
இலங்கை பாதுகாப்பு செயலர் ராஜிநாமா
இதனிடையே இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, அவர் இன்று அனுப்பி வைத்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கோரிக்கை விடுத்ததாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே, பாதுகாப்பு செயலாளர் தனது ராஜிநாமா கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே தகவல் கிடைத்திருந்தும், அது குறித்து நடவடிக்கை எடுக்க தவிர்த்த பின்னணியிலேயே இந்த ராஜிநாமா இடம்பெற்றுள்ளது.

இந்தியா விடுத்திருந்த எச்சரிக்கை உள்பட, இலங்கையில் தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தாலும், இது குறித்து தமக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மாத்திரமன்றி, புலனாய்வு பிரிவிலும் மறுசீரமைப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 359ஐ தொட்டுள்ளது. குறைந்தது 500 பேர் காயமடைந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை.
காவல்துறையினர் ஒன்பது தாக்குதலாளிகளில் எட்டு பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் வெளிநாட்டினர் யாரும் இல்லை.
''இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்'' என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
''அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,'' என்றும் அவர் கூறியுள்ளார்.
''தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்'' என்றும் ருவன் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
















