இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதன் பின்னர் என்னென்ன நடந்தது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது எப்படி?
நட்சத்திர விடுதிகள், தேவாலயங்கள் என இலங்கையிலுள்ள ஆறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
Image caption: நீர்கொழும்புவிலுள்ள செபாஸ்டியன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பால் ஏற்பட்ட சேதம் புகைப்பட காப்புரிமை Reuters
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
இலங்கையிலுள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆறு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஐந்து மணிநேரத்தில் தெகிவலையிலுள்ள மிருகக் காட்சி சாலை அருகே ஏழாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இலங்கையின் இருவேறு பகுதிகளிலுள்ள மசூதிகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதுடன், முஸ்லிம்களுக்கு சொந்தமான இரண்டு கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டது.
இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள விமான நிலையம் அருகே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்தனர்.
புகைப்பட காப்புரிமை AFP
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட குறைந்தது 290 உயிரிழந்துள்ளதாகவும், 500 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை நான்கு மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொழும்புவில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87 டெடனேடர்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக பிபிசி செய்தியாளர் அசாம் அமீன் தெரிவித்தார்..
புதிய குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம்
அந்தோணியர் தேவாலயம் அருகே பீதியில் மக்கள் ஓடுவது போன்ற காணொளியை ‘தி கார்டியன்’ செய்தியாளர் மைக்கேல் சபி பகிர்ந்துள்ளார். வாகனம் ஒன்றில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை பாதுகாப்பு அதிகாரிகள் செயலிழக்க செய்ய முற்பட்டபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பிபிசி சிங்களா சேவையின் அசாம் அமீன் கூறுகிறார்.