You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்து - கத்தோலிக்கர் முரண்பாட்டை ஏற்படுத்தும் தீய சக்திகளுக்கு இடம் தரவேண்டாம்: விக்னேஸ்வரன்
இலங்கையில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்ளுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயல்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளார் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்காரப் பலகை அண்மையில் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி நடந்த சம்பவத்தை காரணமாக வைத்து அங்கு தமிழர் என்ற அடையாளத்துடன் அன்னியோன்யமாக வாழ்ந்துவரும் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விஷமத்தனமான செயற்பாடுகள் குறித்து மக்கள் விழிப்பாக இருந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
"இந்து-கத்தோலிக்க பதற்றத்தை தூண்டும் வகையில் சில தீய சக்திகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நான் அறிகிறேன்.
இதன் ஒரு அங்கமாக மன்னாரில் உள்ள கத்தோலிக்க குருமார்கள் மற்றும் மக்களை அச்சுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுவருவதாக அறிந்து நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்கான பல தசாப்தகால போராட்டத்தின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்து- கத்தோலிக்க வேறுபாடு ஏற்பட்டது கிடையாது.
எமது உரிமைகளுக்கான பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களில் கத்தோலிக்க மக்களும் கத்தோலிக்க மத குருமார்களும் மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எமது மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்துக்கு கொண்டுசென்று நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் அளப்பரிய சேவையை கத்தோலிக்க மத குருமார்கள் செய்திருப்பது எம் எல்லோருக்கும் தெரியும்.
குறிப்பாக எனது மதிப்புக்குரிய மன்னார் மாவட்டத்தின் முன்னாள் பேராயர் இராயப்பு யோசப் அவர்கள் உயிர் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் எமது அரசியல் உரிமைகளை வலியுறுத்தியும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமாக ஆற்றியுள்ள மகத்தான சேவையினை இந்த சந்தர்ப்பதில் நினைவு கூறுகின்றேன்.
அதேபோல, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான பணிகளில் ஈடுபட்டு 12 க்கும் அதிகமான பாதிரியார்கள் தமது உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். பலர் காணாமல் போயிருக்கின்றார்கள்" என்று கூறியுள்ளார் விக்னேஸ்வரன்.
"முள்ளிவாய்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டபோது கத்தோலிக்க மத குருமார்கள் மக்களின் பாதுகாவலர்களாக செயற்பட்டு தமது உயிர்களை இழந்திருக்கின்றார்கள்.
அதேபோல, தந்தை செல்வா எந்தவித மத வேறுபாடுகளும் இல்லாமல் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இறுதிவரை அயராது உழைத்தார். அவரை தமது தலைவனாக ஏற்று தமிழ் மக்கள் பெரும் ஆதரவை வழங்கினார்கள்.
பின்னர் தம்பி பிரபாகரன் எமது உரிமைகளுக்காக போராடியபோது எந்தவித மத வேறுபாடுகளும் இன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அவர்பின்னே அணிதிரண்டு அளப்பெரும் தியாகங்களைச் செய்தார்கள்" என்று மேலும் கூறினார் விக்னேஸ்வரன்.
"இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். எவரது தூண்டுதல்களுக்கும் ஆளாகி எந்த ஒரு முரண்பாட்டு நடவடிக்கைகளிலும் தயவு செய்து ஈடுபடாதீர்கள்.
பொறுத்தார் பூமி ஆள்வார். இது இந்துக்களுக்கும் பொருந்தும் கத்தோலிக்க மக்களுக்கும் பொருந்தும் என்பதை மறவாதீர்கள்" என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்