You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அடைத்து வளர்த்த சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர் மற்றும் பிற செய்திகள்
செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞர் ஒருவர் தாம், வீட்டில் அடைத்து வைத்து வளர்த்த ஆண் சிங்கம் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
மைக்கேல் பிராசெக் எனும் அவர் ஓர் ஆண் சிங்கம், ஒரு பெண் சிங்கம் ஆகியவற்றை இனப்பெருக்கம் செய்ய வைக்கும் நோக்கில், தம் வீட்டிலேயே அடைத்து வளர்த்து வந்தார்.
அவரது உடலை மீட்க, அந்த விலங்குகள் இரண்டையும் சுட்டுக் கொன்றுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரே வீட்டில் அந்த விலங்குகளை வளர்க்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
அவர் அந்த விலங்குகளை அணுக யாரையும் அனுமதிக்கவில்லை.
விலங்குகள் நலம் தொடர்பான செக் குடியரசின் சட்டங்களின்படி, எந்த விலங்குகளையும் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தக்கூடாது என்பதால், அவை வேறு இடத்துக்கும் மாற்றப்படவில்லை.
மூன்று மடங்கு சாலைகள் - உண்மை என்ன?
முந்தைய ஆட்சியை ஒப்பிடும்போது இந்தியாவில் மூன்று மடங்கு சாலைகள் போடப்பட்டுள்ளதாக தற்போதைய அரசு கூறுகிறது.
நரேந்திர மோதி ஆட்சியில் குறிப்பிடத்தக்க அளவில் சாலைகள் போடப்பட்டுள்ளன. சாலை கட்டுமானம் முந்தைய ஆட்சியைவிட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போதைய இந்திய அரசு கூறுவது போல மூன்று மடங்கு அதிகரிக்கவில்லை.
அரசின் அதிகாரபூர்வ தகவல்களின்படி 2014-ல் மோதி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வோர் ஆண்டும் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் நீளம் வெகுவாக அதிகரித்தது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த கடைசி நிதியாண்டில் (2013-14) 4,260 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டன.
2017-18-ல் பாஜக ஆட்சியின்போது 9,829 கி.மீ நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. 2013-14 நிதியாண்டில் போடப்பட்ட சாலைகளின் அளவை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் மூன்று மடங்கு அதிகமாக சாலை போடப்படவில்லை.
இந்துக்களை அவமதித்த பாகிஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம்
இந்து மதத்தவர்களை தரக்குறைவாகப் பேசிய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சர் ஃபாயஸ் உல் ஹாசன் சோஹன் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இப்பிரச்சனையில் சோஹன் பதவி விலகியதை மாநில முதல்வரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு காணொளி மூலமாக செய்தி அனுப்பியுள்ள செய்தி தொடர்பாளர் ஷபாஸ் கில், ''இந்நிகழ்வு துரதிருஷ்டவசமானது. சோஹன் சொன்ன கருத்தில் இருந்து பஞ்சாப் அரசு விலகி நிற்கிறது. அது பஞ்சாப் அரசின் கருத்தல்ல'' என்றார்.
விரிவாகப் படிக்க - இந்துக்களை இழிவுபடுத்தியதற்காக அமைச்சரை நீக்கியது பாகிஸ்தான் மாகாண அரசு
எச்.ஐ.வி. கிருமிகள் முழுமையாக அகற்றம்
எச்.ஐ.வி. நோய்த் தொற்றுக்கு உள்ளான பிரிட்டன் நோயாளி ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரது உடலில் இருந்த எச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.
எச்.ஐ.வி. நோய் எதிர்ப்புத் திறன் மிகுதியாக உள்ள ஒருவரது உடலில் இருந்து ஸ்டெம் செல் எடுக்கப்பட்டு எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான நோயாளிக்கு தரப்பட்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
பத்தாண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த எச்.ஐ.வி. நோயாளி ஒருவருக்கு இதைப் போலவே எச்.ஐ.வி. எதிர்ப்புத் திறன் மிகுந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட எலும்பு மஜ்ஜை பொருத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடலில் இருந்து எச்.ஐ.வி. கிருமிகள் ஒழிந்தது தெரியவந்தது
விரிவாகப் படிக்க - எச்.ஐ.வி. தொற்றிய நோயாளி உடலில் இருந்து கிருமிகள் முழுமையாக அகற்றம்
அதிமுக கூட்டணியில் இழுபறி ஏன்?
அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றுடன் கூட்டணியை இறுதிசெய்திருக்கிறது.
விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தே.மு.தி.க குறைந்தது ஏழு இடங்களையாவது அ.தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி எதிர்பார்க்கிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை 4-5 இடங்களை மட்டுமே தரத் தயாராக உள்ளது.
தே.மு.தி.க. தவிர ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறது.
விரிவாகப் படிக்க - கூட்டணியை இறுதி செய்தது திமுக; அதிமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்