மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா: ''2009 போரில் மக்கள் கொல்லப்பட காரணமானவருக்கு ராணுவத்தில் உயர்பதவி''

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள ஒருவரை ராணுவத்தின் பிரதானியாக நியமிப்பது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் இலங்கையை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. என சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை ராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜென்ரல் சவேந்திர சில்வாவை நேற்றையதினம் நியமித்திருந்தார்.
இந்நிலையில் இவரின் நியமனம் தொடர்பில் சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு மருத்துவமனைகள், உணவினை பெறுவதற்காக வரிசையில் நின்றவர்கள் மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பலஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58வது படைப்பிரிவின் கட்டளை தளபதி என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ளவேண்டியவர் என ஐக்கியநாடுகள் விசாரணை குழு தெரிவித்திருந்தது என சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள்,குழந்தைகள் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போவதற்கும் பாலியல் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் காரணம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2009 மே 18ம் திகதி வெள்ளைக்கொடியுடன் சரணடைதல் இடம்பெற்றவேளை அப்பகுதியில் சவேந்திர சில்வா காணப்பட்டார் என தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் தலைவர்களுடன் சில்வா கைகுலுக்குவதை நான் நேரில் பார்த்தேன் என ஓருவர் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு ஒவ்வொரு முறை செல்லும்போது கைதுசெய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் இராணுவ பிரதானியொருவரை இலங்கை தற்போது கொண்டுள்ளது. என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Sirisena/twitter
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா குறித்த ஆவணமொன்றை நாங்கள் தயாரித்துள்ளோம் அதனை விரைவில் வெளியிடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவேந்திர சில்வாமீது சர்வதேச குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளதாக நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகம் தேடப்படும் இலங்கையர்களில் மிக முக்கியமானவர் இவர் என்பதில் சந்தேகமில்லை எனவும் தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா எனினும் ஒரு தசாப்தகாலத்திற்கு பின்னர் விசாரணையை எதிர்கொள்ளவேண்டிய அவரிற்கு துயரம் அளிக்கும் விதத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2009 யுத்தத்திலிருந்து தப்பி வெளிநாட்டுக்கு தப்பியோடிய பலர் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அவமரியாதை செய்யும் நியமனம் இதுவென தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இது இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளையும் பாதிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்
முழு நாட்டிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியவரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாவுமான ஒருவரிற்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து ஜனாதிபதி சிறிசேன என்ன கருதுகின்றார் என்பது புரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களில் சவேந்திர சில்வாவின் பதவி உயர்வினை உன்னிப்பாக கண்காணித்து ஆராய்ந்திருந்தால் இந்த பதவி உயர்வை தடுத்திருக்கலாம் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












