You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை வவுணதீவில் இரு போலீசார் சுட்டுக் கொலை - கருணாவுக்கு தொடர்பா?
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு போலீஸ் அலுவலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் (கருணா) இடையில் தொடர்புள்ளதா என்பது தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்தே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் விரைவில் தெளிவூட்டல்களை வழங்குமாறு தான் ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு போலீஸ் உத்தியோகஸ்தர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்றிரவு உயிரிழந்திருந்தனர்.
வீதி போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் உயிரிழந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இதே வேளை, மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட குழுவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர், போலீஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியை நோக்கி குறித்த விசேட குழுவினர் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் போலீஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்த சிறப்புக் குழுவுடன், போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவும் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்துடன், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வெளியிட்ட டுவிட்டர் பதிவை அடுத்தே, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இந்த கேள்வியை சபையில் இன்று எழுப்பியிருந்தார்.
''சில ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் என்னை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாக எண்ணுகின்றேன். பலர் எனக்கு தகவல் அனுப்பியதோடு, தொலைபேசி மூலம் அழைத்திருந்தனர். தயவு செய்து நினைவில் வையுங்கள். நான் மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா அம்மான். நீங்கள் வேண்டுமென்றால், வேறு யாரிடமும் கேட்டுப்பாருங்கள், 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த கருணா அம்மான் யார் என்று?''
இவ்வாறு கருணா அம்மான் என்றழைப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் 2 தினங்களுக்கு முன்னர் டுவிட்டர் பதிவு வெளியிட்டார்.
இந்த டுவிட்டர் பதிவை அடிப்படையாக வைத்தே, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார நாடாளுமன்றத்தில் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.
விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவை அடுத்தே, இந்த வவுணதீவு சம்பவம் நேர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார சுட்டிக்காட்டியிருந்தார்.
அதனால் இந்த விடயம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்க வேண்டும் எனவும், இது குறித்து விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விடயங்களை ஆராய்ந்த சபாநாயகர், சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு அறிவித்து, தெளிவூட்டல்களை வழங்குமாறு கூறுவதாகவும் தெரிவித்திருந்தார்.
வவுண தீவு சம்பவம்
இலங்கையின் கிழக்கேயுள்ள மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் போலீஸ் உத்தியோகத்தர்கள் இருவரின் சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வவுணதீவிலுள்ள காவலரணில் இரவு நேரக் கடமையில் இருந்த போலீஸ் உத்தியோகத்தர்களே, இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
அதிகாலை 2 மணியில் இருந்து 3 மணிக்குள் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என, போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இறந்த போலீஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சிங்களவர் மற்றொருவர் தமிழர்.
மேற்படி இருவரின் உடல்கள் மீதும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், இவர்கள் கத்தி போன்ற ஆயுதத்தினால் தாக்கப்பட்ட பின்னரே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், வவுணதீவு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலீஸ் அலுவலர் ஒருவர் பிபிசி க்கு தெரிவித்தார்.
அதேவேளை, பலியானவர்கள் இருவரிடமும் இருந்த கைத்துப்பாக்கிகள் அபகரிக்கப்பட்டுள்ளன என்றும் வவுணதீவு போலீஸார் தெரிவித்தனர்.
இன்று காலை சம்பவ இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி சடலங்களைப் பார்வையிட்டார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர், அரச பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர்கள் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் பலியான போராளிகளை நினைவு கூரும் மாவீரர் தினம், கடந்த செவ்வாய்கிழமை (27ஆம் தேதி) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் வவுணதீவு பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்