"பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பு சிறிசேன தரப்புக்கு இருந்தது"

இலங்கையில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்துக்கு பெரும்பான்மையினைக் நிரூபிப்பிதற்கான சந்தர்ப்பம் இருந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தார் என்று, அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாகக் கூறியவர்களில் சிலர், இறுதி நேரத்தில் மாற்றுத் தரப்புக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, கட்சித் தாவல்களில் ஈடுபடலாம் என, ஆளுந்தரப்புக்கு தகவல்கள் கிடைத்தமையினாலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய சூழ்நிலை உருவானதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

புதிய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்காக, பஷில் ராஜபக்ஷ மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழு செயற்பட்டதாகவும், அந்தக் குழுவில் தானும் உறுப்பினராக இருந்ததாகவும் இதன்போது, அமைச்சர் ஹிஸ்புல்லா கூறினார்.

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனும், புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வேண்டி பேசினோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

"புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு முன்னர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக்க ஆளுந்தரப்பினர் விரும்பினோம். இருந்தாலும் அரசியல் சூழ்நிலைகள் கருதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சி தீர்மானித்தது" என்றும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :