You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை
இலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக இது அச்சிடப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு 5000 ரூபாயாகும்.
5000 ரூபாய் நோட்டு போன்ற தோற்றத்தில் 50,000 ரூபாயாக அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது பற்றி இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அத்தியட்சகர் (காவல்துறை கண்காணிப்பாளர்) அம்பாவிலவைத் தொடர்புகொண்டு பேசினோம்.
சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது, விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை, எனவே மேலதிக தகவல்களை வழங்க முடியாது என்று அவர் கூறினார்.
இந்த 50,000 ரூபாய் கள்ள நோட்டுக்களை குருணாகல் பிரதேசத்தில் போலீசார் அண்மையில் கைப்பற்றியிருந்தனர். இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதேசத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரும், பிரபல பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் (டியூசன் ஆசிரியர்) ஒருவரும் இந்தச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
போலி பணநோட்டுகள்:
கள்ள ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் பரவலாக புழக்கத்தில் உள்ளன. இதை தடுப்பதற்கு மத்திய வங்கியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணநோட்டு பணியகமும் பணியாற்றி வருகிறது.
மத்திய வங்கி ரூபாய் நோட்டுக்களை அச்சிடும்போது பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகிறது.
ஆனாலும், மோசடியாளர்கள் ரூபாய் நோட்டுக்களுக்கு ஒத்த கள்ள நோட்டுக்களை அச்சிட்டு மக்களிடம் புழக்கத்திற்கு விடுவதும், அதனை அதிகாரிகள் கைப்பற்றி உரியவர்களைக் கைதுசெய்வதும் தொடர் கதையாகி இருக்கிறது.
பொதுவாக, இவ்வாறான மோசடியாளர்கள் செய்யும் வேலைகளை அதிக கவனம் செலுத்தினால் அன்றி சாதாரணமாக இனம் காண முடியாது.
ஆனால், இதற்கு விதிவிலக்காக ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று அண்மையில் இலங்கையின் குருணாகல் என்ற பிரதேசத்தில் பதிவானது.
இலங்கையில் தற்போது அதிக மதிப்புடையதாக 5,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் உள்ளது. இருந்தாலும், 5,000 ரூபாய் நோட்டை போன்று 50, 000 ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டு போலீசாரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது.
மோசடியாளர்கள் அச்சிடட்டு புழக்கத்தில் விடுகின்ற கள்ள நோட்டுக்களை எவ்வாறு இனங்காண்பது என்பதற்கு பல வழிமுறைகள் இருப்பதாக மத்திய வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய வங்கி மக்களை தெளிவூட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் அவர் கூறினார்.
"பொதுவாக பணநோட்டுக்களில் சந்தேகம் வந்தால் அதனை முதலில் பரிசோதிக்க வேண்டும்.
ரூபாய் நோட்டுக்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவது இலங்கை மத்திய வங்கியின் பிரதான பொறுப்புக்களில் ஒன்று.
அதற்கமைய, கள்ள நோட்டுக்களை அச்சிடுவதை தடுப்பதற்காக சமீபத்திய ஆண்டுகளில் ரூபாய் நோட்டுக்களில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்களை இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களம் அதிகரித்துள்ளது. இந்த அம்சங்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்" என்று அவர் கூறினார்.
ரூபாய் நோட்டுக்கள் பற்றி பொதுமக்கள் நன்கு அறிந்திருந்தால், ரூபாய் நோட்டுக்கள் போன்ற போலிகளை பார்த்தவுடன் கண்டறிய முடியும். மோசடியில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று மத்திய வங்கி அறிவுறுத்துகிறது.
கள்ள நோட்டுக்களை மாற்றுவது 1949ம் ஆண்டு 58ம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். தண்டனைச் சட்டக்கோவை 478இன் அ - ஈ பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும்.
கள்ள நோட்டுக்களை எவ்வாறு கண்டறிவது?
பணத்தைக் கையாளும்போது கள்ள நோட்டு என சந்தேகம் ஏற்பட்டால், சந்தேகப்படும் ரூபாய் நோட்டுக்களை உண்மையான பணநோட்டுக்களுடன் ஒப்பிட வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பாதுகாப்பு பண்புகள் அதிலுள்ளதா என சோதிக்க வேண்டும்.
கள்ள நோட்டுக்களை கொண்டுவந்தவரின் விவரங்களைக் குறித்து வையுங்கள். உடல் தோற்றம், வந்த வாகனம், அந்த நபர் இறுதியாக இருந்த இடம் போன்ற தகவல்கள் விசாரணைகளுக்குப் பயன்தரும்.
அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணநோட்டு பணியகத்திற்கு (0112422176 - 0112326670 என்ற துரித தொலைபேசி எண்) இது பற்றி அறிவிக்கலாம்.
புழக்கத்திலுள்ள நிஜமான ரூபாய் நோட்டுக்களை போன்று கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பதற்கும், அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றிவிடுவதற்கும் இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ரூபாய் நோட்டு பணியகத்துடன் கூட்டாக இணைந்து பணியாற்றுவதாக இலங்கை மத்திய வங்கியின் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கள்ள நோட்டு புழக்கத்தை தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்