ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மூன்று யானைகள்

இலங்கையில் நேற்று, சனிக்கிழமை இரவு, கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயில் மோதியதால், மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.

பொலநறுவை மாவட்டம் - புனானை பிரதேசத்துக்கு அருகிலுள்ள அசலபுர எனும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

'மீனகயா' எனும் அந்த கடுகதி ரயிலில் மட்டக்களப்பிலிருந்து - கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.

புனானை மற்றும் வெலிக்கந்தை பிரதேசங்களுக்கு இடையிலுள்ள அசலபுர எனும் இடத்தின் காட்டுப் பகுதியில், இரவு சுமார் 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக, மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம அதிபர் ஏ. வசந்தகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த விபத்தினால், தண்டவாளத்திலிருந்து ரயில் தடம் மாறியதாகவும், அதன் காரணமாக, போக்குவரத்து தடைப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து, நேற்றிரவு 8.15 மணிக்கு, குறித்த ரயில் புறப்பட்டபோது, அதில் சுமார் 150 பயணிகள் இருந்துள்ளனர்.

விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டமையினால், அதில் பயணம் செய்தவர்கள், பாதுகாப்பாக பொலநறுவைக்கு பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ரயில் நிலைய பிரதம அதிபர் வசந்தகுமார் தெரிவித்தார்.

மேற்படி ரயில் போக்குவரத்து வழியில், விபத்து நடைபெற்ற பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில் யானைகள் அடிக்கடி நடமாடுவது வழமையாகும்.

இதற்கு முன்னரும், குறித்த வழியில் யானைகள் மற்றும் மாடுகள் ரயிலில் மோதுண்டு இறந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், பகல் வேளைகளில் இவ்வாறு யானைகள் தண்டவாளத்தை மறித்து நிற்பதை ரயில் சாரதிகள் அவதானித்த பல சமயங்களில், ரயில் நிறுத்தப்பட்டு விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம அதிபர் நினைவுபடுத்தினார்.

தண்டவாளத்தை மறித்து நிற்கும் விலங்குகள் 200 மீட்டர் தூரத்துக்கு அப்பால் அவதானிக்கப்படும்போதே, ரயிலின் வேகத்தை குறைக்கவோ, ரயிலை நிறுத்தவோ முடியும் எனவும் வசந்தகுமார் சுட்டிக்காட்டினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :