ஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே

ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான "த லோன்லி பிளானட்" இதனை அறிவித்துள்ளது.
ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என, லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள 10 இடங்களைக் கொண்ட பட்டியலில், அறுகம்பே 8வது இடத்தில் உள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரசே செயலகப் பிரிவில் அறுகம்பே அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் இது மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.

1996ம் ஆண்டு இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம், அறுகம்பே, சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது. அறுகம்பே இயற்கையினால் அழகு நிறைந்த பகுதியாகும்.
குறிப்பாக, இங்குள்ள கடற்கரை சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்புகிற ஒன்றாகும். மேலும், "சர்பிங்" எனப்படும் கடலலைச் சறுக்கு விளையாட்டுக்கு, உலகளவில் மிகவும் சிறந்த இடங்களில் அறுகம்பேயும் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உலக நாடுகளில் இருந்து அறுகம்பே பகுதிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனால், தற்போது சுற்றுலாப் பயணிகளால் அறுகம்பே களைகட்டியுள்ளது.

ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, பின்லாந்து, ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து அறுகம்பே பகுதிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் என்று, அறுகம்பே சுற்றுலா சங்கத்தின் தலைவர் எம்.எச்.ஏ. றஹீம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இலங்கையில் போர் நடைபெற்றபோது அறுகம்பே பகுதிக்கு இரண்டாயிரம் வரையிலான சுற்றுலாப் பயணிகள்தான் ஒவ்வோர் ஆண்டும் வந்தனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது என்றும், இந்த வருடம் 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் அறுகம்பே சுற்றுலா சங்கத்தின் தலைவர் றஹீம் மேலும் கூறினார்.

அறுகம்பேயில் 2010ஆம் ஆண்டு 49 தங்கும் விடுதிகளும் , 30 உணவுச்சாலைகளும் அமைந்திருந்த நிலையில், தற்போது அங்கு 171 தங்கும் விடுதிகள் உள்ளதாகவும் றஹீம் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டவர்கள் மட்டுமன்றி, உள்நாட்டவர்களும் அறுகம்பே பகுதிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளாக வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












