You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: 'நல்லிணக்க முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்'
இலங்கையில் இன மோதல்களை தவிர்க்க நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய தூதுவர்கள் குழு ஒன்று கூறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் துங் லாய் மார்கூ, ருமேனியா தூதுவர் டாக்டர். விக்டர் சியூஜ்டியா மற்றும் சுவிஸ் நாட்டின் தூதுவர் ஹெயின்ஸ் வாக்கர் நெடர்கூர்ன் ஆகியோரே கண்டிக்கான விஜயம் ஒன்றை அடுத்து இவ்வாறு கூறியுள்ளனர்.
கண்டியில் அண்மையில் வன்செயல்கள் நடந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்ட பின்னரே இவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
கண்டி வன்செயல்களில் 3 பேர் பலியானதுடன், வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் என முஸ்லிம்களுக்கு சொந்தமான 200 சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.
இன, மத வெறுப்புணர்வை கையாளாமல் விட்டுவிடுவதால் ஏற்படக் கூடிய பிரதிவிளைவுகளை இலங்கை போதுமான அளவுக்கு அனுபவித்துவிட்டது என்று கூறியுள்ள இந்தத் தூதுவர்கள், அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள் வெறுப்புணர்வு பேச்சுக்களை, இனவாதத்தை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
இப்படியான குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காது என்ற நிலைமை மாற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கண்டியில் பௌத்த பீடத்தலைவர்களை சந்தித்த அந்த தூதுவர்கள், வன்செயல்களை தடுக்க ஏனைய மதங்களின் தலைவர்களுடன் திட்டமிட்ட வகையிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
கண்டியிலும் அம்பாறையிலும் இந்த மாத முற்பகுதியில் நடந்த வன்செயல்களில் வணிகங்களுக்கும், வீடுகளுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டதுடன், இனப்பதற்றமும் உருவானது.
அதனையடுத்து அரசாங்கம் வெறுப்புணர்வை தூண்டுவதாகக் கூறி சமூக ஊடகங்களை தற்காலிகமாக தடை செய்தது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு மார்ச் 18 இல் அது மீண்டும் நீக்கப்பட்டது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்