You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்பதே கிடையாது: உலக சுகாதார நிறுவனம்
அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த உணவு வழங்கப்பட்டதாகக் கூறி சிலர் அந்த உணவகத்தை தாக்கியதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏனைய சொத்துக்கள், பள்ளிவாசல் ஆகியவற்றையும் தாக்கினர். பின்னர் கண்டியில் வேறு ஒரு காரணத்தை காட்டி தொடங்கிய வன்செயல்கள் பெரிதாகி முஸ்லிம் மக்களுக்கு பெருத்த சேதத்தை உருவாக்கியது.
தொடர்புடைய செய்திகள்:
இதனையடுத்து அவ்வாறு ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து இருக்கிறதா இல்லையா என்பது குறித்த விவாதமும், ஆய்வும் இங்கு இலங்கை மட்டத்தில் தொடங்கியிருந்தது.
அரசாங்கத்தின் பகுப்பாய்வுகள், அம்பாறை உணவகத்தில் அப்படியான மருந்து கலக்கப்படவில்லை என்று அறிவித்தன. அதேவேளை உள்ளூர் மட்டத்தில் ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்யும் மருந்து எதுவும் கிடையாது என்று சுகாதார திணைக்களமும் அறிவித்தது. மருத்துவர்களான அமைச்சர்களும் கூறினார்கள்.
தொடர்புடைய செய்திகள்:
இப்போது உலக சுகாதார நிறுவனமும் இப்படியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்யும் வகையிலான மருந்தோ மாத்திரையோ இதுவரை கிடையாது என்றும் அப்படியான ஒன்று புழக்கத்தில் இல்லை என்றும் அது கூறியுள்ளது.
ஆகவே உணவில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து கலந்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது ஆதாரமற்ற தகவல் என்று இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி டாக்டர். ரஷியா பெண்டஸி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அம்பாறையில் இது தொடர்பாக நடந்த தாக்குதலில் குறைந்தப்ட்சம் ஐந்து பேராவது காயமடைந்ததுடன், பல சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.
அந்த தாக்குதலை கண்டித்துள்ள முஸ்லிம் அமைப்புக்கள் பலவற்றை உள்ளடக்கிய முஸ்லிம் கவுன்ஸில் இது குறித்து கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்