இலங்கை பெட்ரோல் தட்டுப்பாடு : குற்றச்சாட்டை நிராகரித்த எல்.ஐ.ஓ.சி

இலங்கையில் தற்போது பெட்ரோலுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு தமது நிறுவனத்தை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை லங்கா இந்திய பெட்ரோல் நிறுவனம் (LIOC ) நிராகரித்துள்ளது.

 இது தொடர்பாக தம் மீது குற்றம் சுமத்த முற்படுவது தவறானது என்றும் அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையான பெட்ரோலிய உற்பத்திகளை இலங்கைக்கு பல வருடங்களாக விநியோகிக்கின்ற நிறுவனம் என்ற அடிப்படையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண தன்னாலான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

பெட்ரோலுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு தமது நிறுவனம் தான் காரணம் என குற்றம் சுமத்த முற்படுவது தவறானது என்றும் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் லங்கா இந்திய பெட்ரோல் நிறுவனம் கூறுகின்றது

இலங்கை சந்தையில் 16 சதவீத எரிபொருட்கள் தான் தங்களால் விநியோகம் செய்யப்படுவதாகவும் . மீதமுள்ள 84 சத வீதமும் இலங்கை பெட்ரோலிய கூட்டு நிறுவனத்தின் விநியோகத்திலே தங்கியள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிடுகின்றது

"இந்நிலையில் பாரியளவில் நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றால் இலங்கை பெட்ரோலிய நிறுவனத்தின் விநியோகத்தினால் தான் ஏற்பட முடியும்" என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதற்கான தீர்வு குறித்து ஆராயந்து அறிக்கை சமர்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்துள்ளார்.

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , சரத் அமுனுகம மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

 இதற்கிடையில் எரிபொருட்களுடன் இந்திய கப்பலொன்று இலங்கைக்கு வந்துகொண்டிருப்பதாகவும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வந்தடையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

எரிபொருள் நெருக்கடி நிலை தொடர்பாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளித்த போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

"எரிபொருளை சேமிக்க எரிபொருள் தாங்கிகளை புனரமைத்து எரிபொருள் தாங்கி மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம் பெற்றுள்ளது " ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுளள்ளார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :