You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை : மட்டக்களப்பு நகர வீதிகளில் குவியும் குப்பைகள்
இலங்கையில் மட்டக்களப்பு நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் இரு வாரங்களுக்கும் மேலாக கழிவுகளை அகற்றும் பணிகள் தடைப்பட்டுள்ளதால் வீதிகளிலும், பொது இடங்களிலும் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.
இதனால், குடியிருப்பாளர்கள் சுகாதாரம் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றார்கள். மட்டக்களப்பு மாநகரசபையினால் சேகரிக்கப்படும் கழிவுகள் 50 வருடங்களுக்கும் மேலாக திருப்பெருந்துறை என்ற இடத்தில் கொட்டப்படுகின்றன.
அந்த இடத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை காரணமாகவே இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மாத இறுதியில் குப்பை மேட்டில் பரவிய தீ காரணமாக அதனை அண்மித்த பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் பாதிப்புகளை எதிர் கொண்ட நிலையில் கழிவுகள் கொட்டுவதை தடை செய்யும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடை விதிக்கக் கோரி குடியிருப்பாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்வரும் 28ம் வரை நீதிமன்றத்தினால் கழிவுகளை கொட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வீதித்துள்ள இடைக்கால தடை காரணமாக கழிவு அகற்றும் பணிகள் தடைப்பட்டுள்ள நிலையில் வீதிகளிலும் பொது இடங்களிலும் பொது மக்களால் வீசப்படும் கழிவுகள் குவிந்து காணப்படுகின்றன.
தற்காலிக ஏற்பாடாக வேறு இடங்களில் அவற்றை கொட்டுவதற்கு மாநகர சபை நிர்வாகம் முயற்சிகளை எடுத்திருந்தாலும் அந்த பகுதிகளிலுள்ள குடிருப்பாளர்களின் எதிர்ப்புகள் காரணமாக அது பலனளிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபை நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு நாளும் 90 டன் குப்பைகள் மற்றும் கழிவுகள் சேருவதாக மாநகர ஆணையர் வி.தவராசா கூறுகின்றார்.
70 டன் கழிவுகள் மாநகர சபையினாலும், 20 டான் கழிவுகள் பொது மக்களினாலும் முகாமைத்துவம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
மாநகரசபையினால் சேகரிக்கப்படும் கழிவுகள் திருப்பெருந்துறையிலுள்ள தின்ம கழிவுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன.
மாநகர ஆணையரால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு சுமார் 23 டன் கழிவுகள் சேதனைப் பசளையாக மாற்றப்படுவதாகவும் பிளாஸ்டிக், காகித மட்டைகள் உள்ளிட்ட 1.5 டன் கழிவுகள் மீள் சுழற்சிக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
எஞ்சிய 46 டன் கழிவுகள் உக்காத மற்றும் கலப்பு கழிவுகளாக அகற்றப்பட்டு திருப்பெருந்துறை நிலப்பரப்பு தளத்தில் கொட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருப்பெருந்துறையிலுள்ள குப்பை மேடு சுற்றுச்சூழலுக்கும், தங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுவதாக அதனை அண்மித்த பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் ஏற்கனவே தெரிவித்து அதனை அகற்றுமாறு கோருகின்றனர்.
மாநகர சபையினால் அந்த இடத்தில் 1935-ஆம் ஆண்டு தொடக்கம் அதாவது மக்கள் குடியிருப்புக்கு முன்னதாகவே தின்ம கழிவுகள் கொட்டும் இடமாக பயன்படுத்தப்படுவதாக மாநகர சபை நிர்வாகம் தனது தரப்பு வாதத்தை முன் வைக்கின்றது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்