You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: டெங்கு நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை 310-ஆக உயர்வு
இலங்கையில் 2017-ஆம் ஆண்டில் இதுவரையில் இனம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இதுவரையில் 1 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ள வேளையில், மரணங்களின் எண்ணிக்கையும் 310 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார துறையினரால் பாரிய அச்சுறுத்தல் என கருதப்படும் டெங்கு நோயை பரப்பும் கொசுவுக்கு எதிரான போராட்டம் பல்வேறு வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மே மாதம் தொடக்கம் நோயாளர்களின் எண்ணிக்கையிலும் மரணங்களிலும் அதிகரிப்பை காண முடிகின்றது.
அரசு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்த வருடத்தில் இதுவரையில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 605 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 310 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் 12,498 நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். மே மாதம் தொடக்கம் ஜுலை வரையிலான தரவுகளை மையப்படுத்தி பார்க்கும் போது மூன்று மாதங்கள் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிகின்றது.
மே மாதத்தில் 15,886 பேரும், ஜுன் மாதத்தில் 24,978 பேரும், ஜுலை மாதத்தில் 29,055 பேரும், புதிதாக இனம் காணப்பட்டுள்ளதாக அரசு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவில் அறிக்கையிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் கூடுதலான நோயாளர்கள் இம் மாதத்தில் இனம் காணப்பட்டிருந்தாலும் முதலாம் வாரத்தில் - 9322 என காணப்பட்ட எண்ணிக்கை நான்காம் வாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை காண முடிகின்றது.
வாராந்தம் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி பல்வேறு தரப்புடன் இணைந்து தங்களால் முன்னெடுக்கப்படுகின்ற டெங்கு ஓழிப்பு செயல் திட்டத்தின் முன்னேற்றத்தை காட்டுவதாக சுகாதார துறையினரால் சட்டிக் காட்டப்படுகின்றது.
இந்த ஆண்டில் இதுவரையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்கள் மற்றும் மரணங்களை கடந்த வருடத்துடன் ஓப்பிடும் போது இதுவரையில் இரு மடங்கு கடந்துவிட்டதாகவே பதிவுகள் மூலம் அறியமுடிகின்றது. 2016ம் ஆண்டு இனம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 55,150 ஆகும். 97 மரணங்கள் பதிவாகியுள்ளன.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்