You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: வெள்ளம், நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு
இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்த அனர்த்தங்களினால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள தகவல்களின்படி 1 இலட்சத்தி 14 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்தி 42 ஆயிரம்229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குடும்பங்களில் தமது வாழ்விடங்களை வெளியேறிய 24 ஆயிரத்து 603 குடும்பங்களை கொண்டஒரு இலட்சத்து ஓராயிரத்து 638 பேர் 319 பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் அரசு பேரிடர் மையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி.
மேல் , தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அனர்த்தம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையில் நாளாந்தம் அதிகரிப்பு காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை பிந்தைய தகவல்களின்படி 122-லிருந்து 146-ஆக கூடியுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 97-லிருந்து 112-ஆக அதிகரித்துள்ளது.
மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் 42 பேரும், கம்பகா மாவட்டத்தில் 03 பேரும் என 45 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மாத்தறை மாவட்டம் -11 பேர் , காலி மாவட்டம் - 08 பேர் , அம்பாந்தோட்டை மாவட்டம் - 05 பேர் என தென் மாகாணத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களினால் கடும் பாதிப்புக்குள்ளான இம் மாகாணங்களில் 97 பேர் தொடர்பான தகவல்களை 48 மணித்தியாலங்கள் கடந்தும் அறியமுடியாத நிலை தொடருகின்றது.
களுத்துறை மாவட்டத்திலே கூடுதலானோர் காணாமல் போயுள்ளனர். அம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் தொகை 68 என அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல் கூறுகின்றது.
ரத்தினபுரி மாவட்டம் -05 , கேகாலை மாவட்டம் -02 , மாத்தறை மாவட்டம் - 17 , காலி மாவட்டம் -05 என்ற எண்ணிக்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் பேரிடர் முகாமைத்துவ மையத்தில் பதிவாகியுள்ளது.
தொடர்பான செய்திகள்:
இதேவேளையில், வெள்ள நிலைமை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்பான "சேவ் த சில்ரன் "எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழையுடன் கூடிய கால நிலை சற்று விலகிக் காணப்படுகின்ற போதிலும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை அதிகாரிகள் முன்னிலையில் மற்றுமோர் போராட்டமாக இந்த பிரச்சனை எழுந்துள்ளது என்றும் ''சேவ் த சில்ரன்" தெரிவிக்கின்றது.
மழை வெள்ள நீர் ஓரே இடத்தில் தேங்கி நிற்பதால் அது கொசு பெருக்கத்திற்கு சாதகமான பின்புலமாக அமைகின்றது. இந்த ஆண்டு இதுவரையில் 53 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வருடம் இதே காலப் பகுதியுடன் ஓப்பிடும் போது 150 சதவீதம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக '' சேவ் த சில்ரன்" சுட்டிக்காட்டுகின்றது.
வழமையாக இதே காலப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் மழையை விட கூடுதலான மழை பெய்துள்ளது. தேங்கி நிற்கும் மழை நீர் அப்படியே விடப்படும் நிலையில் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என கவலை வெளியிட்டுள்ள " சேவ் த சில்ரன் '' மழை வெள்ளம் , நிலச்சரிவு அனர்த்தங்களினால் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ள குடும்பங்களுக்கு இது மற்றுமோர் தாக்கமாக அமையும் என்றும் தெரிவிக்கின்றது.
இதுவும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்