குருநாத் மெய்யப்பன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, கிரிக்கெட் வாரியத் தலைவரின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போட்டிகளின் மீது பந்தயம் கட்டியது, ‘ஸ்பாட் ஃபிக்ஸிங்கில்’ ஈடுபட்டது தொடர்பாக அவர் மீது மும்பை காவல்துறை குற்றப்பத்திரிகையை சமர்பித்துள்ளது.
குருநாத் மெய்யப்பனுடன், நடிகர் விண்டூ தாராசிங் மற்றும் இருபது பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை காவல்துறைச் சட்டம் 130ன் கீழ், போட்டிகளில் பந்தயம் கட்டிய குற்றச்சாட்டு குருநாத் மெய்யப்பன் மீது பிரதானமாக வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடர்பு

இந்தக் குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானின் கிரிக்கெட் நடுவர் அசாத் ரவூஃபின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த மேலும் சில இடைத்தரகர்கள் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
குருநாத் மெய்யப்பன் அணியின் உத்திகளை வெளியாட்களுக்கு கசியவிட்டார் எனவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக தான் சார்ந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதே அவர் பந்தயம் கட்டினார் என மும்பை காவல்துறையினர் கூறுகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்திகள் குறித்த தகவல்களை குருநாத் மெய்யப்பன், பந்தய சூதாட்டத் தரகரான விண்டூ தாரா சிங்குடன் பகிர்ந்து கொண்டார் என்றும், அதையடுத்து விண்டூ போட்டிகள் மீது பந்தயம் கட்டுதல் மற்றும் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.
தான் மற்றும் மெய்யப்பன் ஆகிய இருவர் சார்பிலும், புக்கிகள் மூலம் விண்டூ தாரா சிங் பணம் கட்டினார் என்று, மும்பை காவல்துறை பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிகை கூறுகிறது.
"சம்பந்தம் இல்லை"

இதனிடையே, இந்த விஷயம் தொடர்பில், தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை வைத்துள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஸ்ரீநிவாசன் குடும்பத்தாருக்கு சொந்தமானது என்பதும், மெய்யப்பன் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகினார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.








