டி20 உலக கோப்பை: "இந்தியா மேட்ச் எப்பவும் இப்படித்தான்" - அலுத்துக் கொண்ட வங்கதேச கேப்டன்

    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று வங்கதேச அணி சேஸிங்கில் ஏழு ஓவர்களை ஆடி முடித்திருந்த நேரம் அது. திடீரென மழை பொழியவே, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் மத்தியில் சோக ரேகைகள் பரவின. காரணம் 'டக்வொர்த் லூயில் விதி'.

ஆம். டி20 போட்டிகளை பொறுத்தவரையில் மழை குறுக்கிட்டாலும் ஐந்து ஓவர்களை கடந்துவிட்டால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி முடிவு தெரிந்துவிடும்.

இந்தியா 185 ரன்கள் என ஓரளவு வலுவான இலக்கையே நிர்ணயித்திருந்தது. ஆனால் வங்கதேச அணி ஏழு ஓவர்கள் முடிவில் 66ரன்கள் எடுத்திருந்தது. அதுவும் விக்கெட் இழப்பின்றி!

அப்போதுதான் அந்த தகவல் வெளிவந்தது.

டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேசம் ஆறு ஓவர்களில் டிஎல்எஸ் இலக்கை விட 17 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் மழை ஏற்கெனவே சில அணிகளின் வெற்றி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால், மழை நிற்கவில்லை எனில் வங்கதேசம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படக்கூடும் எனும் நிலை. இதனால் தான் இந்திய அணியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மறுமுனையில் வெற்றியை நெருங்கி விட்டதாக வங்கதேச முகாம் கருதியது.

"மழை விடக்கூடாது, நிச்சயம் ஆட்டத்தை பாதிக்க வேண்டும்," என்றே வங்கதேச ரசிகர்கள் கருதியிருக்கக் கூடும்.

கணக்கை மாற்றிய இயற்கை

இந்த ஆட்டத்தில் தோற்றால் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு என்ன ஆகும்?

அடுத்த ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வென்றாலும், வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளிடையேயான போட்டி அரை இறுதி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா? பாகிஸ்தான் அணியின் வெற்றிக்காக இந்திய ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுமா என்றெல்லாம் சமூக ஊடகங்களில் பலர் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இயற்கையின் கணக்கு வேறு மாதிரி இருந்தது. மழை நின்றது. 16 ஓவர்களில் வங்கதேசம் 151 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதால் இந்திய ரசிகர்கள் குஷியாயினர்.

ஆனால், வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் லித்தன் தாஸ் ஆகியோர் ஆட்ட நடுவர் எராஸ்மஸ் உடன் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்ததை திரையில் பார்க்க முடிந்தது.

மழையால் நிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது அஷ்வினை பந்துவீச அழைத்தார் ரோகித். எட்டாவது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் லித்தன் தாஸ். இரண்டாவது பந்தில் ரன் அவுட் மூலம் முதல் விக்கெட்டை பறித்தது இந்தியா.

கே.எல்.ராகுல் வீசிய ஒரு அபாரமான த்ரோவால் அஷ்வின் பக்கமிருந்த ஸ்டம்புகள் தகர்ந்தன.

உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்

வங்கதேசம் தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஆனால் இந்திய ரசிகர்கள் மத்தியை போட்டியையே வென்றுவிட்டது போல உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இதற்கு காரணம் ஆட்டமிழந்தது லித்தன் தாஸ் என்பதுதான்.

ஆம். பவர்பிளேவில் லித்தன் தாஸ் ஆடிய ஆட்டம் அப்படி. இந்திய பந்துவீச்சாளர்களை நையப்புடைத்தார்.

ஷமி பந்தில் ஒரு சிக்ஸர் வைத்து 21 பந்துகளில் அரைசதம் விளாசி இந்திய அணி ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்தவர் அவர்தான்.

வங்கதேசம் 68 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது.

அபாரமாக ஆடிவந்த லித்தன் தாஸ் ரன்அவுட் ஆகி வெளியேறும்போது 27 பந்துகளில் அறுபது ரன்கள் அடித்திருந்தார். அதில் ஏழு பந்துகள் பௌண்டரியை முத்தமிட்டன. மூன்று பந்துகள் சிக்சருக்கு பறந்தன.

லித்தன் அவுட் ஆனதும் இந்திய அணி வீரர்களின் உடல்மொழியில் தெம்பு வந்தது.

அஷ்வின் ஓவருக்கு பிறகு ஹர்டிக் பாண்ட்யா வீச வந்தார். அவரது ஓவரில் ஒரு சிக்ஸர் வைத்தார் ஷாண்டோ. ஆனால் அதற்கு அடுத்த ஓவரை வீசிய ஷமியின் ஓவரில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேச அணி.

11வது ஓவரை அஷ்வின் வீசினர். அடுத்தடுத்து இரு பந்துகளை பௌண்டரிக்கு ஓடவிட்டார் ஷகிப் அல் ஹசன். 11 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை நெருங்கியது வங்கதேசம்.

அப்போது அர்ஷிதீப்பை அழைத்தார் ரோகித். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.

அஃபிப் ஹொசைன் மற்றும் ஷகிப் அல் ஹசன் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அர்ஷ்தீப். ஆட்டத்தின் திருப்புமுனை ஓவராக அந்த ஓவர் அமைந்தது. வெறும் இரண்டு ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் அர்ஷ்தீப்.

அதற்கடுத்த ஓவரை பாண்டியா வீசினார். தன் பங்குக்கு அவரும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, அவசர கதியில் ஆடிய வங்கதேசம் வெற்றி வாய்ப்பை வீணடித்துக் கொண்டிருந்து.

கடைசி நேர போராட்டம்

எனினும் அதற்கடுத்து 14 மற்றும் 15வது ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு போராடியது.

கடைசி ஓவர் அதாவது ஆட்டத்தின் பதினாறாவது ஓவரை அர்ஷ்தீப் வீசினர். அந்த ஓவரில் வங்கதேசம் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை.

முதல் ஐந்து பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார் நூருல் ஹசன். கடைசி பந்தை சிக்சருக்கு விளாசினால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லும் எனும் நிலை. ஆனால் அவரால் லாங் ஆஃபில் ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

டக்வொர்த் முறைப்படி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

இந்த ஆட்டத்தில் முதல் ஏழு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்த வங்கதேசம், அடுத்த 9 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது குறிப்பித்தக்கது.

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் 184 ரன்கள் எடுத்தது.

கே.எல்.ராகுல் இந்த உலகக்கோப்பையின் முதல் மூன்று போட்டிகளில் சொதப்பினாலும் இந்த போட்டியில் அரைசதம் விளாசினார். விராட் கோலி இந்தத்தொடரில் தனது மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார். 44 பந்துகளில் அவர் 64 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார். வஙகேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேசும்போது, இந்தியாவுடன் விளையாடும்போது எப்போதும் இதே கதைதான். வெற்றிக்கோட்டுக்கு மிக அருகே வந்துவிடுவோம் ஆனால் கோட்டை தொடமாட்டோம். இந்த போட்டியை இரண்டு அணிகளும் உற்சாகமாக எதிர்கொண்டனர் என்கிறார்.

இந்த ஆட்டத்தின் வெற்றியால் இந்தியா ஆறு புள்ளிகளோடு குரூப் 2 பிரிவில் முதலிடத்தில் உள்ளது. மேலும் அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: