டி20 உலகக் கோப்பை: விராட் கோலி 'டெண்டுல்கர் சிக்சரால்' இந்தியாவை தாங்கிப் பிடித்த மற்றொரு தருணம்

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டம் வங்கதேசத்துடன் இந்தியா வெற்றி பெறஉதவியது.

மழை குறுக்கிட்ட ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்த இந்திய அணிக்கு எதிராக 16 ஓவரில் 151 ரன்கள் எடுக்க வேண்டும் என வங்கதேசத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்தப் போட்டியில் விராட்கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 16 ரன்களை எடுத்திருந்தபோது உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதற்கு முன்பாக இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன 1016 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

இந்தப் போட்டியின் 19-ஆவது ஓவரில் விராட் கோலி அடித்த சிக்சர் 1998-ஆம் ஆண்டு டெண்டுல்கர் சார்ஜாவில் அடித்த சிக்சருடன் ஒப்பிடப்பட்டது.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள்.

கடந்த மூன்று போட்டிகளிலும் சரியாக ஆடாத கே.எல். ராகுல் மீது கடுமையான விமர்சனம் இருந்த நிலையில், வங்கதேசத்துடனான போட்டியில் அவர் அந்த விமர்சனத்தைப் போக்கும் வகையில் சிறப்பாக ஆடினார். எனினும் மறு முனையில் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த கே.எல். ராகுல் 32 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தபோது ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆடவந்த சூர்யகுமார் யாதவும் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஷாகிப் அலஹசன் பந்துவீச்சில் போல்டானார். பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா மீண்டும் ஒரு முறை ஏமாற்றினார். 5 ரன்களில் அவர் வெளியேறினார்.

இதன் பிறகு வந்த தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தாங்கிப் பிடித்த விராட் கோலி

ஆனால் மறுபுறம் விராட் கோலி பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் விறுவிறுப்பாகவும் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். அடிலெய்ட் மைதானத்தில் சராசரியாக எடுக்க வேண்டிய 170 ரன்கள் என்ற இலக்கை இதனால்தான் இந்தியாவால் தாண்ட முடிந்தது.

தொடக்கத்தில் சாதாரண வேகத்துடன் ஆட்டத்தைத் தொடங்கிய அவர் கடைசி ஓவர்கள் நெருங்கும்போது வழக்கமாகக் கையாளும் அதிரடி உத்தியைக் காட்டினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் அவர் 64 ரன்களை எடுத்திருந்தார்.

'டெண்டுல்கர் சிக்சர்'

ஆட்டத்தில் 19-ஆவது ஓவரில் கடைசிப் பந்தை ஹசன் மஹ்முத் வீசியபோது, முன்னோக்கி இறங்கி வந்து ஸ்ட்ரெய்ட் திரையில் பந்தை சிக்கசருக்கு விரட்டினார் கோலி. இது 1998-ஆம் ஆண்டு சார்ஜா போட்டியில் டெண்டுல்கரை நினைவுபடுத்துவதாக இருந்தது என் வர்ணனையாளர்கள் வியந்தனர்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 184-ரன்களை எடுத்தது. இந்தப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் இந்தியாவுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும்.

ட்ரென்டான 'அஸ்வின் அண்ணா'

இந்தப் போட்டியில் அக்சர் படேல் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி ஓவரில் ஒரு சிக்சரும் ஒரு பவுண்டரியும் அடித்தார். இதைக் குறிப்பிட்டு 'அஸ்வின் அண்ணா' என்ற ஹேஷ்டேக் ட்ரென்டானது. 6 பந்துகளைச் சந்தித்த அஸ்வின் 13 ரன்களை அடித்து இந்தியாவின் எண்ணிக்கை உயர்வதற்கு உதவினார்.

மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்

186 ரன்கள் இலக்குடன் ஆடத் தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்து இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே நெருக்கடி அளித்தார். 21 பந்துகளில் அரைச்சதத்தைக் கடந்த லிட்டன் தாஸ், தொடர்ந்து அதிடியாக ஆடினார்.

வங்கதேச அணி 7 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தபோது மழைகுறுக்கிட்டது. அந்த நேரத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்தியாவை விட 17 ரன்கள் அதிகம் எடுத்திருந்தனர். அன்த நேரத்தில் லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 59 ரன்களும் நஜ்முஸ் ஹுசைன் ஷான்டோ 16 பந்துகளில் 7 ரன்களும் எடுத்திருந்தனர்.

குறைக்கப்பட்ட ஓவர்கள்

மழை நீடித்திருந்ததால் ஆட்டம் 4 ஓவர்கள் குறைக்கப்பட்டு வங்கதேச அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு லிட்டன் தாஸ் ரன் அவுட் ஆனதால் வங்கதேசத்தின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் விழுந்தன.

கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், அந்த அணி வீரர்கள் 14 ரன்களை எடுத்தனர். இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விராட் கோலி

நெருக்கடியான நேரத்தில் அரைச் சதம் அடித்து, விக்கெட்டை காப்பாற்றிய விராட் கோலிக்கு மீண்டும் ஒரு முறை ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. "இதை நான் எதனுடனும் ஒப்பிட விரும்பவில்லை. கடந்தபோனது போனதுதான். ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை நடக்கிறது என்றது கேள்விப்பட்டதில் இருந்தே, நல்ல கிரிக்கெட் ஷாட்கள்தான் முக்கியம் என்று உறுதியாக இருந்தேன்" என்றார் கோலி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: