You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அர்ஷ்தீப் சிங் மட்டும்தான் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கு காரணமா?
- எழுதியவர், அஸ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தவறவிட்ட ஒரு கேட்ச்தான் இந்த தோல்விக்குக் காரணம் என்று கூறி அவர் ட்விட்டரில் ட்ரோல் செய்யப்பட்டார்.
உண்மையில் என்ன நடந்தது?
அர்ஷ்தீப் சிங் அந்த ஒரு கேட்சை பிடித்திருந்தால் ஆட்டத்தின்போக்கே மாறியிருக்கும். ரவி பிஷ்னாய் வீசிய 18வது ஓவரில் ஆசிஃப் அலி அடித்த பந்து கேட்சாக மாறியது. கைக்கு வந்த பந்தை அர்ஷ்தீப் சிங் நழுவவிட்டார். கேப்டன் ரோஹித் சர்மா கோபத்தை வெளிப்படுத்தினார். ஒரே இரவில் அர்ஷ்தீப் சிங் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு டிரென்ட் செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் ஆட்டநாயகன் என்றும் அர்ஷ்தீப் சிங்கை அணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கொந்தளித்தனர். உண்மையில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியதற்கு அர்ஷ்தீப் சிங் மட்டும்தான் காரணமா? 182 ரன்களை இந்தியா இலக்கு நிர்ணயித்தும் பாகிஸ்தானின் வெற்றியை தடுக்க முடியாமல் போனது ஏன்? இந்திய அணியில் தோல்விக்கு சில முக்கிய காரணிகள் இதோ..
ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஆட்டம்
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் எப்போதுமே அனல் பறக்கும். சில ஆட்டங்கள் ரசிகர்களை இறுதி வரை பதற்றத்தில் வைத்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த ஆட்டம்தான் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.
துபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு டாஸ் கைக்கூடவில்லை. முதலில் பேட் செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டாலும் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுலும் பாகிஸ்தானின் பந்துவீச்சை தொடக்கத்தில் வெளுத்துக்கட்டினர். இந்திய அணி பவர்பிளேயில் 62 ரன்கள் சேர்த்தது. ஆனால் அதற்குப் பிறகு போட்டி சற்று மந்த நிலைக்கு மாறியது.
சோபிக்காத இந்திய மிடில் ஆர்டர்
தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்ததும், அடுத்து களமிறங்கிய சூர்யகுமார், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடம் இருந்து பெரிய அளவில் பங்களிப்பு கிடைக்கவில்லை. ஆறுதல் அளிக்கும் விதமாக விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.
கடைசி 5 ஓவர்களில் இந்தியா வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தது. அதுவும் கடைசி 2 பந்தில் பாகிஸ்தான் வீரர் ஃபாகர் சமானின் ஃபீல்டிங் சொதப்பலால்தான் 2 பவுன்டரிகளும் கிடைத்தன. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் பவர்பிளேயில் வெறும் 44 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. பாபர் ஆசாம் 14 ரன்களில் வெளியேறினார். ஃபாகர் சமானும் 15 ரன்களில் விடைபெற்றார்.
நவாஸ் - பாகிஸ்தானின் துருப்புச்சீட்டு
9 ஓவர்களில் 63 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்களை இழந்திருந்தபோதுதான் பாகிஸ்தான் முக்கியமான காயை நகர்த்தியது. முகமது நவாஸை முன்கூட்டியே களமிறக்கியது. அவரும் தனது பங்கிற்கு 20 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணியிடம் இருந்து வெற்றியை பிடுங்கியதில் நவாஸின் ஆட்டம் தவிர்க்க முடியாத ஒன்று. நவாஸ் தான் போட்டியின் ஆட்டநாயகன் என மூத்த கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டார்.
மறுமுனையில் முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் அதிக ரன்களை சேஸ் செய்தபோதெல்லாம் ரிஸ்வானின் ஆட்டம் வெற்றிக்கு முக்கிய பங்களித்திருக்கிறது.
இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்?
- இந்திய அணி வீரர்களை தேர்வு செய்த விதம் முதல் பந்துவீசியது வரை சில இடங்களில் தவறு செய்திருக்கிறது. பல நேரங்களில் 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியுள்ள இந்திய அணி இந்த முறை 5 பேரை மட்டுமே பயன்படுத்தியது. அதுவும் குறிப்பாக ஹர்திக் பாண்டியாவை 3வது வேகப்பந்து வீச்சாளராக கருதியது பெரும் பின்னடைவை தந்தது. பேட்டிங்கில் டக் அவுட்டான ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 44 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவரிடம் இருந்து பெரிய பங்களிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
- இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து துல்லியமான பந்துவீச்சுத் தாக்குதல் வெளியாகததை பாகிஸ்தான் சாதகமாக்கிக் கொண்டது. மிடில் ஓவர்களில் இந்தியா விக்கெட் எடுக்கத் தடுமாறியது. அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமாரும் 4 ஓவர்களை வீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
- ஜடேஜா காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால் அவருக்கு பதில் அஷ்வினை தேர்வு செய்திருக்கலாம். அஷ்வின் ஒரு மூத்த வீரர், முக்கியமான ஆட்டங்களில் விளையாடிய சிறந்த அனுபவமுடையவர். பாகிஸ்தனின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அவரது பந்துவீச்சு சவாலாக அமைந்திருக்ககூடும் எனவும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா ஆடும் லெவனுக்கு வீரர்களை தேர்வு செய்த விதமும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. தீபக் ஹூடா அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு கேப்டன் ரோஹித் பந்துவீச வாய்ப்பளிக்கவில்லை.
- இதுதவிர, முக்கியமான தருணங்களில் விக்கெட்களை வீழ்த்தினால் மட்டுமே போட்டியை வெல்ல முடியும். ரவி பிஸ்னாய் வீசிய 18வது ஓவரில் ஆசிஃப் அலி அடித்த கேட்சை அர்ஷ்தீப் சிங் நழுவவிட்டது இந்தியாவின் வெற்றியை முற்றிலுமாக பறித்தது. கடைசி ஓவரில் ஆசிஃப் அலியின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தியிருந்தாலும் 1 பந்து மீதமிருந்த நிலையில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
'அர்ஷ்தீப் ஒரு தங்கம்'
இந்தியாவின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங்தான் காரணம் என பலரும் விமர்சித்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் குரல் கொடுத்துள்ளார். "அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்துங்கள். யாரும் வேண்டுமேன்றே கேட்சை தவறவிடுவதில்லை. நாங்கள் எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் குறித்தும் இந்திய அணி குறித்து மோசமாக விமர்சிப்பவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன். அர்ஷ்தீப் ஒரு தங்கம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல போட்டியில் அழுத்தம் ஏற்படும்போது தவறு செய்வது சகஜம்தான் என விராட் கோலியும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்