2022 ஐபிஎல் ஏலம்: 14 கோடிகளுக்கு தீபக் சஹரை ஏலம் எடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்

2022 ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலம் இன்று காலை 11 மணி முதல் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என மொத்தம் 10 அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

2022 ஐபிஎல் ஏலத்தை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்த நிலையில், ஏலம் விட்டுக் கொண்டிருந்த ஹியூ எட்மியடெஸ் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால், ஏற்பட்ட பரபரப்பில் ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், ஏலம் மீண்டும் மதியம் 3:30 மணிக்கு தொடங்கப்படும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏலத்தில் யார் யார் எந்தெந்த அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர் என்ற சில முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

  • இதுவரை அதிகபட்சமாக இஷான் கிஷனை 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
  • அடுத்தபடியாக 14 கோடி ரூபாய்க்கு தீபக் சஹரை ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
  • தமிழக வீரர் நடராஜனை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டு பிளெசிஸை 7 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்படவில்லை. அவரின் தொடக்க விலை 2 கோடி ரூபாயாக இருந்தது.
  • இன்று நடைபெற்ற ஏலத்தில் முதல் வீரராக ஷிகார் தவானை 8.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.
  • டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயஸ் அயரை 12.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
  • அனுபவம் வாய்ந்த வேகபந்து வீச்சாளர் முகமது ஷமியை 6.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் டைடன்ஸ்.
  • தமிழ்நாட்டை சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • மேற்கு இந்திய வீரரான ஜேசன் ஹோல்டர் 8.5 கோடி ரூபாய்க்கு லக்னெவ் சூப்பர் ஜெயின்ட் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
  • இந்தியாவை சேர்ந்த உத்தப்பாவும், இங்கிலாந்து அணியின் ஜேசன் ராயும் தொடக்க விலையிலேயே ஏலம் எடுக்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: