இந்தியா vs ஸ்காட்லாந்து: அதிரடி வெற்றியால் மீண்டும் போட்டிக்குள் வருகிறதா கோலி படை?

17.4 ஓவர்களில் 10 விக்கெட்டை வீழ்த்தி, வெறும் 6.3 ஓவரில் 89 ரன்களை அடித்து டி20 உலகக் கோப்பை தொடரில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்து தன் அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துள்ளது இந்திய அணி

டாஸில் தொடங்கிய வெற்றி

இந்தியா, டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில், கோலியால் டாஸ் வெல்ல முடியவில்லை. மூன்று முறையும் முதலில் பேட் செய்தது இந்திய அணி.

ஆனால் இந்த முறை ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி, முதலில் பந்து வீச தீர்மானித்தார். ஸ்காட்லாந்து அத்தனை வலுவான, அதிக அனுபவம் கொண்ட அணியில்லை என்றாலும், இந்த உலகக் கோப்பைத் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் அபார வெற்றி பெற வேண்டிய அழுத்தத்தில் தான் இந்தியா களமிறங்கியது.

10 விக்கெட்டுகள்

2.3ஆவது பந்தில் விழத் தொடங்கிய ஸ்காட்லாந்தின் விக்கெட்டுகள், 17.4ஆவது பந்து வரை நிற்கவில்லை. 6.6 ஓவருக்குள் ஸ்காட்லாந்தின் டாப் ஆர்டர் பேட்டர்களை பெவிலியன் அனுப்பியது ஜடேஜா, பும்ரா, ஷமி இணை.

ஸ்காட்லாந்தின் கலும் மெக்லாய்ட் மற்றும் மைக்கெல் லீஸ்க் ஓரளவுக்கு நின்று ஆடத் தொடங்கிய போது, லீஸ்கின் விக்கெட்டை வீழ்த்தி அந்த ஜோடியை பிரித்தார் ஜடேஜா.

மீண்டும் மெக்லாய்ட், மார்க் வாட்டுடன் இணைந்து மெல்ல ரன் குவிக்கத் தொடங்கிய போது, மெக்லாய்டின் விக்கெட்டை வீழ்த்தி ஸ்காட்லாந்தின் ரன்ரேட்டை வெகுவாகக் குறைத்தார் மொஹம்மத் ஷமி.

ஆனால் மறுமுனையில் மார்க் வாட் நிதானம் காட்டினார். அவரோடு தங்கள் விக்கெட்டை பறிகொடுக்காமல் நின்று ஆடத் தான் ஆள் இல்லாமல் போனது.

16ஆவது ஓவரில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி (இதில் சஃப்யான் ஷரீஃபின் ரன் அவுட்டும் அடக்கம்) ஸ்காட்லாந்தை சுருட்டிவிட்டார் ஷமி. கடைசியில் மார்க் வாட்டின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.

17.4 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்து 85 ரன்களைக் குவித்திருந்தது ஸ்காட்லாந்து. ஜார்ஜ் முன்சே 19 பந்துகளுக்கு 24 ரன்களையும், கலும் மெக்லாய்ட் 28 பந்துகளுக்கு 16 ரன்களையும், மைக்கெல் லீஸ்க் 12 பந்துகளுக்கு 21 ரன்களையும், மார்க் வாட் 13 பந்துகளுக்கு 14 ரன்களையும் குவித்தனர்.

இந்திய பந்துவீச்சாளர்களில் மொஹம்மத் ஷமி 4 விக்கெட் (ஷரீஃபின் ரன் அவுட்டையும் சேர்த்து), ஜடேஜா 3 விக்கெட், பும்ரா 2, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தி அதிரடி காட்டினர்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையை பெற்றார் ஜஸ்ப்ரீத் பும்ரா.

ரன்ரேட் அழுத்தம்

வெற்றியைத் தாண்டி, இந்தியா தன் அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்க குறைந்த ஓவர்களில் போட்டியை வெல்ல வேண்டிய அழுத்தம் இருந்தது. இந்திய அணி, நியூசிலாந்தின் ரன்ரேட்டை கடக்க வேண்டுமானால் 8.5 ஓவர்களுக்குள்ளும், ஆப்கானிஸ்தானின் ரன்ரேட்டை விட அதிக ரன்ரேட்டைப் பெற 7.1 ஓவரிலும் போட்டியை வெல்ல வேண்டும் என களமிறங்கியது.

இந்தியா போன்ற அனுபவமுள்ள அணிக்கு 85 என்பதுபெரிய இலக்கு இல்லை என்றாலும் அவசரப்படாமல் விளையாடத் தொடங்கியது கே எல் ராகுல் - ரோஹித் சர்மா இணை. ஆனால் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் பஞ்சமில்லாமல் ஆடினர்.

4.6ஆவது பந்தில், எல்.பி.டபிள்யூ முறையில் 16 பந்துகளுக்கு 30 ரன்களோடு வெளியேறினார் ரோஹித். மறு புறம் ராகுல் தன் அதிரடியைத் தொடர்ந்தவர், 5.6ஆவது பந்தில் 19 பந்துகளில் 50 ரன்களோடு வெளியேறினார். அவர் எதிர்கொண்ட 19 பந்துகளில் 9 பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கு தெறிக்கவிட்டார். இந்திய ஒப்பனர்கள் இருவரின் விக்கெட் பறிபோன போது, இந்தியா 82 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அடுத்தடுத்து வந்த விராட் கோலி மற்றும் சூர்ய குமார் யாதவ் மீத ரன்களை குவித்து 6.3 ஓவரில் 89 ரன்களைக் குவித்து வெற்றி வாகை சூடினர். அதோடு நியூசிலாந்து (1.277) மற்றும் ஆப்கானிஸ்தானை (1.481) விட இந்தியா (1.619) அதிக ரன் ரேட்டையும் பெற்றது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்தை தோற்கடித்து, இந்தியாவும் நமீபியாவை நல்ல ரன்ரேட்டுடன் தோற்கடித்தால், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியில் கால்பதிக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :