You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரிப்பு
தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்ததால் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிட்டால், மாசுபாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று எவ்வளவு மாசு ஏற்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, சென்னையின் ஐந்து மண்டலங்களிலும் காற்றுத் தர குறியீடு மிக மோசமான நிலையில் இருக்கிறது.
பெசன்ட் நகரில் தீபாவளிக்கு முன்பு (26.11.2021) காற்றுத் தரக் குறியீடு 41ஆக இருந்தது. ஆனால், தீபாவளி தினத்தன்று இது 342ஆக உயர்ந்தது. தியாகராய நகரில் காற்றுத் தர குறியீடு 56லிருந்து 385ஆக உயர்ந்திருக்கிறது. நுங்கம்பாக்கத்தில் 51லிருந்து 369ஆக உயர்ந்திருக்கிறது. திருவல்லிக்கேணியில் 52லிருந்து 368ஆகவும் சௌகார்பேட்டையில் 60லிருந்து 371ஆகவும் இந்தக் குறியீடுகள் உயர்ந்துள்ளன.
குறிப்பாக இந்த ஆண்டில் மிதக்கும் நுண்துகள்களின் அளவுதான் வெகுவாக அதிகரித்துள்ளது. காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடின் அளவில் பெரிய மாறுபாடு ஏதுமில்லை.
காற்றுத் தர குறியீட்டைப் பொறுத்தவரை, 50க்குக் குறைவான அளவில் இருப்பதே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. 51லிருந்து 100வரை திருப்திகரமான அளவு என கருதப்படுகிறது. ஆனால், 300க்கு மேல் உள்ள அளவைப் பொறுத்தவரை, அது மிக மோசமான குறியீடாகக் கருதப்படுகிறது.
தீபாவளிக்கு முன்பு சென்னையின் பெசன் நகரில் காற்றுத்தர குறியீடு 50க்குக் குறைவாகவும் மற்ற இடங்களில் 100க்குக் குறைவாகவும் இருந்த நிலையில், தீபாவளியன்று சென்னையில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியது.
கடந்த 2019, 2020 ஆகிய இரு ஆண்டுகளில் சென்னையில் காற்றின் தரம் 100 என்ற எண்ணை ஒட்டியே இருந்தது. ஆனால், இந்த ஆண்டு மாசுபாடு பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஒலி மாசைப் பொறுத்தவரை சென்னையின் இந்த ஐந்து பகுதிகளிலும் தீபாவளிக்கு முந்தைய அளவுகளோடு ஒப்பிட்டால், சிறிதளவு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த ஆண்டு இருந்த நிலையே இந்த ஆண்டும் நீடித்தது.
இந்த ஆண்டு சென்னையில் காற்றின் தரம் மிக மோசமாக இருந்ததற்கு காற்றின் வேகம் குறைவாக இருந்ததும் அதிக ஈரப்பதம் இருந்ததுமே காரணம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்ட புகையும் நுண்துகள்களும் விரைவில் படியாமல் வெகு நேரம் காற்றில் மிதந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஐந்து இடங்களுக்கு மட்டுமே புள்ளிவிவரங்களை அளிக்கும் நிலையில், வேறு சில தனியார் அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுத் தர குறியீட்டு அளவு ஆபாயகரமான அளவான 500+ தாண்டியுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆலந்தூரில் 895 AQI ஆகவும் மணலியில் 578 AQI ஆகவும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 20 மடங்கு அதிகம். இந்த அளவு காற்று மாசுள்ள பகுதியில் வாழ்பவர்கள் 45 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்திருப்பார்களோ அவ்வளவு நச்சை சுவாசித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் மோசமான காற்றின்தரம்
தீபாவளி பண்டிகையை தொடர்ந்து இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் ஆபத்தான அளவில் மோசமடைந்துள்ளது.
டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வியாழக்கிழமை இரவு பலர் பட்டாசு வெடித்ததில் காற்று மாசு அதிகரித்தது.
தீபாவளியின் அடுத்த நாள் புகை மூட்டமாகவே விடிந்தது.
வாகனப்புகை, தொழிற்சாலைகளில் வெளியாகும் புகை, தூசி மற்றும் வானிலை காரணங்களால் உலகின் மோசமாக காற்று மாசடைந்த நகரங்களில் பட்டியலில் டெல்லி உள்ளது.
பனிக்காலத்தில் அருகாமை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயிர்களை கொளுத்தும்போது காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு மோசமானதாக மாறும்.
அதே நேரத்தில் திபாவளி பண்டிகை வருவதால், மாசுபாடு மேலும் அதிகரிக்கும்.
நகர் முழுவதும் புகை சூழ்ந்திருந்தது. மேலும் பல தொண்டை எரிச்சல் மற்றும் கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- மலையை மீட்பதற்கு கரம் கோர்த்துப் போராடும் பாமக, விசிக
- நியூட்ரினோ ஆய்வில் கிடைத்த முடிவு: இயற்பியலில் புதிய அத்தியாயம் தொடக்கம்
- வாயில் ரத்தம் வடிய விழுந்து இறந்த 10 நெருப்புக் கோழிகள்: என்ன நடக்கிறது வண்டலூரில்?
- 'முப்பாட்டன் காலத்துலகூட இவ்வளவு கிடைக்கல' - ஸ்டாலின் உதவியால் நெகிழும் நரிக்குறவர் பெண் அஸ்வினி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்