இந்தியா Vs ஆப்கானிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டியின் முடிவால் அரை இறுதி கணக்கு மாறுமா?

இந்தியா Vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

இரு படுதோல்விகளுக்கு பிறகு, மீண்டுவந்து ஒரு பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இதன் மூலம் 2021 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரைஇறுதி வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இருந்து சற்றே தப்பித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது இந்திய அணி. ஆனால், போட்டி முடிந்தபிறகு இந்திய அணியினர் முகத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை. அதற்கு காரணம் ஆப்கானிஸ்தான் அணி சேஸிங்கில் கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளியதே.

2021 உலகக் கோப்பை டி20 தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது முதல், ஆப்கானிஸ்தானை நூறு ரன்களுக்குள் சுருட்ட தவறியது வரை இந்த ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன? இனியும் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு எந்தெந்த அணிகளுக்கு எந்த அளவுக்கு உள்ளது?

அசத்திய தொடக்க வீரர்கள்

2021 உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக டாஸை இழந்ததார் இந்திய அணித்தலைவர் விராட் கோலி. ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் நபி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணியில் அஷ்வின், சூரியகுமார் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தனர். இஷான் கிஷன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடவில்லை.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார்கள். குறிப்பாக ரோகித் ஷர்மா மிக லாவகமாக பௌண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினார். ஐந்தே ஓவர்களில் 50 ரன்களை கடந்தது இந்திய அணி.

இடையில் சற்றே ரன் குவிப்பு மந்தமாக, 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்தது இந்திய அணி. 12வது ஓவரில் இருந்து மீண்டும் அதிரடியை தொடங்கியது இந்த இணை.

குறிப்பாக உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் ரஷீத் கான் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார் ரோகித் ஷர்மா.

எட்டு பந்துகளை பௌண்டரிக்கு விரட்டியும், மூன்று பந்துகளை சிக்சருக்கு விளாசியும் 47 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் ஷர்மா அவுட் ஆனார்.

இந்தியா Vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

முதல் விக்கெட்டை இழந்தபோது இந்திய அணியின் ஸ்கோர் 140 ரன்கள்.

ஃபினிஷிங்கில் அசத்தல்

இந்திய அணி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான ஆட்டத்தில் பேட்டிங்கில் தடுமாறிய நிலையில், ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் தந்தது.

ரோகித்தை தொடர்ந்து ராகுலும் 48 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனாலும், ரிஷப் பந்த் - ஹர்திக் பாண்ட்யா இணை கடைசி ஓவர்களில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நையப்புடைத்தனர்.

இவர்கள் இருவரையும் என்ன செய்வது எனத் தெரியாமல் ஆப்கானிஸ்தான் வீரர்கள் திணறினர். இவ்விருவரின் பேட்களில் பட்ட பந்துகளுக்கு குறிப்பாக கிட்டத்தட்ட இரண்டே வாய்ப்புகள் இருந்தன. ஒன்று பௌண்டரிக்குச் செல்வது அல்லது எல்லைக்கோட்டைத் தாண்டி விழுவது. அவ்வளவுதான்.

இவ்விருவரும் இணைந்து எதிர்கொண்டது 23 பந்துகள் தான். அதில் ஒரு பந்து மட்டுமே டாட் பாலாக அமைந்தது. இந்த இணை 63 ரன்கள் குவித்தது.

200 ரன்களே கடினம் எனும் சூழல் நிலவியபோது அனாயசமாக 210 ரன்கள் குவித்தது இந்திய அணி.

இந்தியா Vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

விராட் கோலி, சூரியகுமார் யாதவ் என இரு பேட்ஸ்மேன்களும் களமிறங்காத சூழலில் இறுதி ஓவர்களில் ஃபினிஷர் வேலையை பந்த் - பாண்ட்யா கூட்டணி கச்சிதமாக முடித்தது.

ஹர்திக் பாண்ட்யா 13 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்; பந்த் 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.

அசத்திய அஷ்வின்; நெருக்கடியைச் சந்தித்த இந்தியா

கடந்த இரு போட்டிகளில் எந்தெந்த துறையில் எல்லாம் இந்தியா சொதப்பியதோ; அதை இரண்டே நாட்கள் இடைவெளியில் மாற்றிக் காட்டியது இந்திய அணி.

ஆப்கானிஸ்தானை 99 ரன்களுக்குள் சுருட்டினால், இந்திய அணியின் ரன்ரேட் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை விட அதிகமாகும் எனும் வாய்ப்பு இருந்தது.

மொஹம்மத் ஷமி விக்கெட் வீழ்ச்சியை துவக்கிவைக்க; பும்ராவும் சேர்ந்துகொள்ள 4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான்.

இந்தியா Vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இரண்டு ஓவர்கள் வீசி ஆறு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றிய தெம்புடன் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீச வந்தார் ஷமி.

ஆனால் அவரை குல்பதீன் நைப், குர்பாஸ் எதிர்கொண்ட விதம் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது. ஒரே ஓவரில் இரண்டு பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 21 ரன்கள் குவித்தது இந்த இணை.

பவர்பிளேவின் கடைசி ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்ட்யாவையும் பௌண்டரி அடித்து வரவேற்றார் குல்பதீன். பவர்பிளேவின் கடைசி இரு ஓவர்களில் மட்டும் 30 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான்.

ஆனால் அடுத்த ஓவரிலேயே ஜடேஜா குர்பாஸ் விக்கெட்டை பறிக்க; ஆட்டம் மீண்டும் இந்தியா பக்கம் திரும்பத் தொடங்கியது. அப்போது அஷ்வினை களமிறக்கினார் கோலி.

அவர் வீசிய நான்கு ஓவர்களில் ஆப்கானிஸ்தானின் வெற்றி வாய்ப்பு வேகவேகமாக மங்கத் தொடங்கியது. ஒரு பக்கம் விக்கெட் வேட்டை, மறுப்பக்கம் ரன்களை விட்டுக்கொடுக்காத சிக்கன பந்துவீச்சு என அசத்தினார் அஷ்வின்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் சரி, இந்த உலகக் கோப்பை தொடரிலும் சரி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் பிளெயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு அஷ்வினுக்கு நழுவிக்கொண்டே இருந்தது.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார் அஷ்வின். அவர் நான்கு ஓவர்கள் பந்துவீசி 14 ரன்கள் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான். ஆனால் கடைசி ஓவர்களில் அதிரடி சரவெடியை தொடங்கியது.

இந்தியா Vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஷர்த்துல் தாக்கூர், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா என யாரையும் விட்டுவைக்கவில்லை. மொஹம்மத் ஷமி வீசிய 19வது ஓவரில் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஐந்து ரன்களை எடுத்தது. மற்றவர்களின் ஓவர்களில் பௌண்டரி, சிக்ஸர்கள் என விளாசியது.

கடைசி 5 ஓவர்களில் இந்த இணை 56 ரன்கள் எடுத்தது. இது இந்திய அணியின் ரன்ரேட்டை வெகுவாக பாதித்துவிட்டது.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது; 211 ரன்களை துரத்திய அந்த அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

பெரிய வெற்றி என்பதால் நெகட்டிவில் இருந்த இந்திய அணியின் ரன்ரேட் பாசிட்டிவாக மாறியது.

ரோகித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அணி 211 ரன்களை குவித்தபோது, ஆப்கானிஸ்தானின் ரன்ரேட்டில் கடும் சேதம் ஏற்படுத்தவும், அதே சமயம் தமது ரன்ரேட்டை அதிரடியாய் உயர்த்திக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பு இருந்தது.

ஆனால், கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதால், குறைந்தபட்சம் 20-25 ரன்களை ஆப்கானிஸ்தானை கூடுதலாக குவிக்கவிட்டதன் மூலம், இந்த போட்டியில் வென்றாலும் ஆப்கானிஸ்தானுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்படுத்தும் வாய்ப்பை தவறவிட்டது இந்திய அணி.

இந்திய அணி இந்த போட்டியில் வென்றதன் மூலம், நியூசிலாந்து அணியைத் தவிர வேறு எந்த அணிக்கும் அதிகபட்சமாக எட்டு புள்ளிகள் கிடைக்காது என்பதால், ஏற்கனவே 4 போட்டிகளில் வென்று எட்டு புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான் அணி அதிகாரபூர்வமாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றில் இன்னும் ஒரு போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே, குரூப் 2 பிரிவில் மற்ற அணிகளுக்கு அரைஇறுதி வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளது?

நியூசிலாந்தின் நிலை என்ன?

இந்திய அணி புதன்கிழமையன்று ஆப்கானிஸ்தானை சாய்த்த நிலையில், அதே தினம் நடந்த மற்றொரு போட்டியில், நியூசிலாந்து கடைசி கட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வென்றது.

நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்து அணி தனது அடுத்த இரு போட்டிகளில் நமீபியா, ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரு போட்டிகளை வென்றாலே போதும். நியூசிலாந்து அணி எளிதில் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இதில் ஒன்றில் தோற்றால் கூட ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.

ஒருவேளை ஆப்கானிஸ்தானோடு தோல்வியடைந்து, நமீபியாவுடன் வென்றால், நியூசிலாந்து அணி ஆறு புள்ளிகளை பெறும். அப்போது ஆப்கானிஸ்தானும் ஆறு புள்ளிகளை பெற்றிருக்கும்;

இந்தியாவும் மீதமுள்ள இரு போட்டிகளை வெல்லும் பட்சத்தில், மூன்று அணிகளும் ஆறு புள்ளிகளை கொண்டிருக்கும். அப்போது நிகர ரன்ரேட் அரைஇறுதி வாய்ப்பை முடிவு செய்யும்.

ஒருவேளை நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வென்று, நமீபியாவுடன் தோல்வியடையும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு தகுதிபெறாது. அப்போது இந்தியா ஒருவேளை ஆறு புள்ளிகளை பெற்றிருந்தால்; இந்தியா அல்லது நியூசிலாந்து அணிகளில் ஏதாவது ஒன்று ரன்ரேட் அடிப்படையில் அரை இறுதிக்குத் தகுதிபெறும்.

ஆப்கானிஸ்தான் வாய்ப்பு எப்படி?

இந்திய அணியுடன் தோல்வியடைந்தபோதிலும் ஆப்கானிஸ்தான் ரன்ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. அந்த அணி அடுத்ததாக நியூசிலாந்துடன் விளையாடவுள்ளது.

அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றால் புள்ளிபட்டியலில் ஆறு புள்ளிகளை பெற்றுவிடும்.

அப்போது ஆறு புள்ளிகளை பெற்ற மற்ற அணிகளின் நிகர ரன்ரேட்டோடு ஒப்பிடப்பட்டு அரைஇறுதி வாய்ப்பு முடிவு செய்யப்படும். ஏற்கனவே நல்ல ரன்ரேட் (+1.481) உள்ளது என்பதால் ஆப்கானிஸ்தானுக்கு அரை இறுதி வாய்ப்பு இன்னமும் பிரகாசமாகவே உள்ளது. ஆனால் நியூஸிலாந்துடன் தோற்றால் தொடரை விட்டு வெளியேறவேண்டியதுதான்.

இந்தியா தகுதி பெறுமா?

தற்போதைய சூழலில் புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளோடு நான்காவது இடத்தில் இருக்கிறது இந்திய அணி. இனி ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த இரு அணிகளையும் வென்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பை நினைத்துப்பார்க்க முடியும். ரன்ரேட்டில் மற்ற அணிகளை விட பின்தங்கி இருப்பதால் (+0.073) அபார வெற்றி தேவை.

ஒருவேளை இரு போட்டிகளில் வென்று, நல்ல ரன்ரேட் வைத்திருந்தாலும் கூட நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவுகளை கவனிக்கவேண்டும்.

நியூசிலாந்து அணி இனி விளையாடவுள்ள இரு போட்டிகளில் ஒன்றிலாவது தோற்றால் மட்டுமே இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவின் அரை இறுதி கனவு முழுமையாக தகர்ந்துவிடவில்லை என்றாலும் கூட, ஏற்கனவே பாகிஸ்தான் அரை இறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை விடவும் அரை இறுதி வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்பதே நிதர்சனம்.

ஆனால், கிரிக்கெட் தொடர் ஆச்சர்யங்களை பரிசளிக்கக் கூடியது. இப்போதைக்கு இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :