You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேசிய விளையாட்டு தினம்- தயான் சந்த்: வெறுங்கால்களில் ஓடி இந்தியாவுக்கு அபார வெற்றி தேடி தந்த மாவீரர்
- எழுதியவர், கெளதமன் முராரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
(இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது)
தயான் சந்த், நீ ஒலிம்பிக் முகாமுக்கு போக வேண்டாம் என ஒரு உயர் அதிகாரியிடம் இருந்து உத்தரவு வந்தது.
தயான் சந்தும் அதிகாரியின் உத்தரவை மதித்து சக ராணுவ வீரர்களோடு பணிக்குத் திரும்பி விட்டார்.
கமாண்டிங் அதிகாரி, தயான் சந்துக்கு இங்கு என்ன வேலை என விவரமறிந்த பிறகு, அவரை 1936 பெர்லின் ஒலிம்பிக் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார் என அவரது மகன் மற்றும் முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் அசோக் குமார அவர் தந்தையின் அனுபவங்களை நினைவுகூர்கிறார்.
"அவர் ரன் எடுப்பது போல கோல் அடிக்கிறார்" என கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேன் தயான் சந்தைப் புகழ்ந்த காலமது. தயான் சந்த் மனித ரூபத்தில் வரும் ஹாக்கி மந்திரவாதி என உலகமே அறிந்திருந்த சமயம்.
1936 ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணியைத் தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
உலகமே பார்த்து நடுநடுங்கிக் கொண்டிருந்த இந்திய ஹாக்கி அணி, 1936 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள கடல் வழியாக ஜெர்மனியைச் சென்றடைந்தது.
கால்களில் வலியோடும் சோர்வோடும் இருந்த இந்திய அணி, அடுத்த நாளே ஒரு பயிற்சி ஆட்டத்துக்கு ஒப்புக் கொண்டது.
ஒரு உள்ளூர் ஜெர்மன் அணியோடு பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யுமாறு இந்திய அணி, ஜெர்மன் ஹாக்கி சங்கத்திடம் கேட்டிருந்தது. பயிற்சி போட்டி நடந்த போது, இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது அவ்வணி.
ஜெர்மானிய வீரர்களின் வேகத்துக்கு இந்தியர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. சரமாரியான தாக்குதல், அட்டகாசமான டிபென்ஸ் என இந்திய அணியை கலங்கடித்துவிட்டார்கள்.
1 - 4 என்கிற கோல் கணக்கில் அவ்வணியிடம் தோற்றது இந்தியா. தயான் சந்தும் அன்று தன் முழு ஃபார்மில் இல்லை. என்ன இது ஜெர்மனியில் ஏதோ ஒரு உள்ளூர் அணியிடமே நாம் தோற்றுவிட்டோம் என்றால், ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருக்கும் ஜெர்மன் தேசிய அணி எப்படி இருக்கும் என வியந்தனர்.
பிறகு ஜெர்மன் ஹாக்கி சங்க தரப்பிலிருந்து, நீங்கள் விளையாடியதே ஜெர்மன் தேசிய அணியோடு தான் என கூறினர்.
ஜெர்மனிக்கும், அப்போதைய ஹாக்கி உலகின் முடிசூடா சக்கர்வர்த்தியாக இருந்த இந்தியாவோடு, ஒரு பயிற்சி ஆட்டம் ஆடிப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அதை இப்படி நிறைவேற்றிக் கொண்டனர்.
இந்தியாவையே வீழ்த்திவிட்டோம், இனி தங்கம் எங்களுக்குத் தான் என இருமாப்போடு ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்கியது ஜெர்மனி.
இந்திய அணியோ... நாம் எப்படி தோற்றோம்? என ஆராயத்தொடங்கியது. தன் பிரச்னைகளைப் பட்டியலிட்டது.
லெஃப்ட் விங் ஜாஃபர் சிறப்பாக ஆடுகிறார்,
ரைட் விங் சஹாபுதீன் க்ளாஸாக அடுகிறார்,
தயான் சந்த் தனக்கே உரிய தனித்தன்மையோடு பிரமாதமாக பாஸ் வாங்குகிறார், கொடுக்கிறார். அவரைப் போலவே அவர் சகோதரர் ரூப் சிங்கும் பிரமாதப்படுத்துகிறார்...
இப்படி ஒவ்வொருவரையும் பரிசீலித்த போது லயோனெல் எம்மெட் என்கிற நபர் ஆடும் இடத்தில் சற்று தொய்வு இருப்பதாக தெரிந்தது.
அலி தாராவை கூப்பிடுங்க
லயோனெல் எம்மெட்டின் இடத்தில் அலி இக்திதார் ஷா தாரா இறங்கினால் ஜெர்மனியை ஒரு கை பார்த்துவிடலாம் என முடிவு செய்தனர். அலி தாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் என பிரிவினைக்குப் பிறகு இதே அலி இக்திதார் ஷா தாரா தான், பாகிஸ்தான் நாட்டுக்காக 1948 ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு நீண்ட காலம் பாகிஸ்தான் ஹாக்கி சங்க பொறுப்புகளில் இருந்தார்.
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. போட்டியில் வெற்றி பெற்று முன்னேறிக் கொண்டு போகும் போது வெல்வது கடினமாகும், கோல் அடிப்பது சிரமமாகும். அது தானே இயல்பு.
ஆனால் இந்தியா ஒவ்வொரு போட்டியையும் வென்று முன்னேற முன்னேற கோல் வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே போனது.
ஹங்கேரியை 4- 0 என வீட்டுக்கு அனுப்பியது இந்தியா. அடுத்து சுற்றில் அமெரிக்காவை 7 - 0 என தோற்கடித்தது. ஜப்பானை 9 - 0 என வெளுத்து வாங்கியது, அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸை 10 - 0 என துவைத்து எடுத்துவிட்டனர்.
அரை இறுதிப் போட்டியிலேயே அலி தாரா இந்திய அணியில் சேர்ந்துவிட்டார். ஆக இந்தியா தன் முழு ஃபார்மில் இருந்தது.
கடைசியில் எல்லோரும் எதிர்பார்த்தது போல, இறுதிப் போட்டியில் இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது.
இறுதிப் போட்டி தொடங்கியது.
சொந்த நாடு, பயிற்சி செய்த மைதானம், பழகிய பருவநிலை என பல சாதக அம்சங்களோடு களமிறங்கியது ஜெர்மனி. முதல் அரைமணி நேரத்தில் இரு அணிகளும் ஒன்றோடு ஒன்று அதிபயங்கரமாக மோதிக் கொண்டன.
32-வது நிமிடத்தில் இந்திய அணித் தலைவர் தயான் சந்த் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 1 - 0 என முன்னிலை வகித்தது.
போட்டிக்கு முந்தைய தினம் மழை பெய்து இருந்ததால், போட்டிக் களம் அதிக ஈரப்பதத்தோடு இருந்தது. ஜெர்மன் வீரர்கள் பிரமாதமாக அண்டர்கட் செய்து ஆடினர்.
இந்தியர்கள் புத்திசாலித்தனமாக Half Volley செய்தும், லாங் ஷாட்களை ஆடியும் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
தயான் சந்த், தன் வேகத்தை அதிகரிக்க, போட்டியின் போது ஸ்பைக் ரக ஷூக்களை விடுத்து, வெறுங்கால்களில் விளையாடினார். அது அவரது இயல்பான வேகத்தைத் வெளிப்படுத்த வசதியாக இருந்தது என 16 ஆகஸ்ட் 1936 அன்று 'தி இந்து' பத்திரிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 8ஆவது நிமிடத்தில் கரோல் தப்சல் கோல் அடித்தார், அப்படியே வரிசையாக ஜாஃபர், தாரா, தயான் சந்த் என இந்திய வீரர்கள் கோல் மழை பொழியத் தொடங்கினர்.
ஜெர்மனியின் கோல்கீப்பர் டிடோ வார்னோல்ட்ஸ் அடித்த அடியில் தயான் சந்த் ஒரு பல்லை இழந்தார் என்பது ஒரு சுவாரஸ்யத் தகவல்.
ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் வேய்ஸ் ஒரு கோல் அடித்தார். ஜெர்மனியின் சில அபாரமான கோல் முயற்சிகளை இந்தியாவின் கோல் கீப்பர் ஆலன் சிறப்பாக தடுத்தார்.
70-வது நிமிடத்தில் தயான் சந்த் ஜெர்மனிக்கு எதிராக தன் கடைசி கோலை அடித்து 8 - 1 என ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக தங்கத்தை வென்றது இந்தியா.
இறுதிப் போட்டியில் தயான் சந்த் மற்றும் அலி தாராவின் காம்போ, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
தயான் சந்தின் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட ஹிட்லர், அவருக்கு ஜெர்மன் ராணுவத்தில் ஓர் உயர் பதவியைத் தருவதாகக் கூறினார். அப்போது இந்திய ராணுவத்தில் வெறும் லன்ஸ் நாயக் என்கிற அதிகாரியல்லாத பதவியில் இருந்த தயான் சந்த் அதை மறுத்தார்.
பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தனி நபராக 11 கோல்களை அடித்தார் தயான் சந்த். ஒட்டுமொத்த பெர்லின் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பல அணிகளுக்கு எதிராக 38 கோல்களை அடித்தனர், இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது. அதுவும் இறுதிப் போட்டியில் ஜெர்மனி அடித்தது.
1936 ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு தயான் சந்த் பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக 1936 ஒலிம்பிக் தான் அவரது கடைசி ஒலிம்பிக் போட்டியானது. 1940, 1944 என இரு ஒலிம்பிக் போட்டிகளும் இரண்டாம் உலகப் போரால் ரத்தாயின.
தயான் சந்த் என்கிற ’ஹாக்கி கடவுளால்’ கடைசி வரை சுதந்திர இந்தியாவுக்காக ஒரு ஒலிம்பிக்கில் கூட விளையாட முடியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்