டோக்யோ ஒலிம்பிக்: பெண் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகாட், அன்ஷு மல்லிக் பதக்கம் வெல்வார்களா?

    • எழுதியவர், ஆதேஷ் குமார் குப்தா
    • பதவி, பிபிசி இந்திக்காக

2016 ரியோ ஒலிம்பிக்கில், இந்தியாவைச் சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றனர். எந்தவொரு ஒலிம்பிக்கிலும் பங்கேற்ற மிகப்பெரிய இந்திய அணி இதுவாகும்.

ரியோவை அடைவதற்கு முன்பு, 74 கிலோ எடை பிரிவின் மல்யுத்த வீரர் நர்சிங் பஞ்சம் யாதவ், ஊக்கமருந்து முறைகேட்டில் சிக்கியபோது, இந்திய மல்யுத்த அணி பெரும் பின்னடைவை சந்தித்தது.

அவர் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் கனவை கைவிட நேரிட்டது. அதுமட்டுமல்லாமல் அவர் பந்தயங்களில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷீல் குமார் ,' தகுதிச்சுற்றில்" அவருக்கு சவால் விடுத்தார். ரியோ செல்வது பற்றிய விஷயம் ஒவ்வொரு நாளும் சூடுபிடித்தது.

இறுதியில் மல்யுத்த கூட்டமைப்பு நர்சிங்கின் பெயருக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் ரியோவுக்கான அவரது பாதையில் ஊக்கமருந்து பிரச்சனை, ஒரு தடையாக வந்தது. ரியோவில், இந்தியாவின் இரண்டு ஆண் மல்யுத்த வீரர்கள் ஃப்ரீஸ்டைலில் பங்கேற்றனர் மற்றும் கிரேக்க-ரோமன் பாணி மல்யுத்தத்தில் இரண்டு மல்யுத்த வீரர்கள் பங்கேற்றனர். ஆனால் அனைவருமே வெறுங்கையுடன் திரும்பினர்.

ரியோவில் முதல் பதக்கம் வென்ற சாக்‌ஷி மல்லிக்

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 12 நாட்கள் வரை இந்திய வீரர்களால் பதக்கப்பட்டியலில் இடம்பிடிக்கமுடியவில்லை. இறுதியில், பெண் மல்யுத்த வீரர் சாக்க்ஷி மல்லிக் 58 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை, பெற்றுத்தந்தார்.

சாக்க்ஷி மல்லிக் முதல் சுற்றில் ஸ்வீடனின் சோஃபியா மேட்சனை 3-1 என்ற கணக்கிலும், இரண்டாவது சுற்றில், மால்டோவாவின் மரியானா செர்டிவாராவை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தினார். ஆனால் காலிறுதியில் ரஷ்யாவின் வலேரியா கோப்லோவாவிடம் 1-3 என்ற ஆட்டக்கணக்கில் தோல்வியடைந்தார்.

சாக்க்ஷி மல்லிக் இந்தத் தோல்வியால் ஏமாற்றமடைந்தார். ஆனால் கோப்லோவா இறுதிப் போட்டிக்கு வந்ததால், அவர் தவறவிடாத 'ரெப்பிஷாஷ்' மூலம் வெண்கலப் பதக்கம் வெல்ல ஒரு வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பை அவர் கை நழுவவிடவில்லை. முதல் ஆட்டத்தில் சாக்க்ஷி மல்லிக் ' பை' பெற்றார். அதன் பிறகு அவர் இரண்டு ஆட்டங்களை வென்றார்.

சாக்க்ஷி மல்லிக்கிற்குப் பிறகு, இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ரியோவில், சாக்க்ஷி மல்லிக் தவிர, இந்தியாவின் வினேஷ் போகாட்,48 கிலோ எடை பிரிவில் நுழைந்தார். ஆனால் காலிறுதியில் சீனாவின் சுன் யின்னிடம் 1-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு பெண் மல்யுத்த வீரர் பபிதா குமாரியும் 53 கிலோ எடை பிரிவில் முதல் சுற்றில் தோற்றுப்போனார்.

இந்த முறை டோக்யோ ஒலிம்பிக்கில் நான்கு இந்திய பெண் மல்யுத்த வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க உள்ளனர். இதில் 50 கிலோ எடை பிரிவில் சீமா பிஸ்லா, 53 கிலோவில் வினேஷ் போகாட், 60 கிலோவில் அன்ஷு மல்லிக், 62 கிலோ எடைப்பிரிவில் சோனம் மல்லிக் ஆகியோர் உள்ளனர்.

வினேஷ் போகாட்

டோக்யோவில் 53 கிலோ எடை பிரிவில் பதக்கத்திற்கான மிகப்பெரிய போட்டியாளர் வினேஷ் போகாட் ஆவார். அவரது எடை பிரிவின் தரவரிசைப்பட்டியலில் அவர் முதல் இடத்தை பெற்றுள்ளார். வினேஷ் போகாட் 2019 ஆம் ஆண்டில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றார். முன்னதாக வினேஷ் 2014 கிளாஸ்கோ மற்றும் 2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார்.

இது தவிர, வினேஷ் 2014 இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும், 2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அல்மாட்டியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வினேஷ் போகாட் 53 கிலோ எடை பிரிவில் தான் ஆடிய எல்லா ஆட்டங்களிலும் எந்தப்புள்ளிகளையும் இழக்காமல், தங்கப்பதக்கம் வென்றார்.

இது ஆசிய சாம்பியன்ஷிப்பில் அவர் பெற்ற முதல் தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அவர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். மல்யுத்த உலகில் அவருக்கு சிறப்பு அறிமுகம் தேவையில்லை. இந்தியாவில் போகாட் குடும்பம், மகளிர் மல்யுத்தத்திற்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு இந்திய வீரரை போலவே டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது வினேஷ் போகாட்டின் கனவு.

வினேஷ் போகாட் ஊடகங்களின் பார்வையிலிருந்து விலகியிருந்து, பயிற்சி பெறுவதற்கு முன்னுரிமை தருகிறார். ரியோவில் நடந்த போட்டியின் போது, ​​அவரது முழங்காலில் கடுமையான சுளுக்கு ஏற்பட்டது. வலியில் துடித்தபடி அவர் பந்தய வளையத்திலிருந்து திரும்பினார். இந்த வருத்தம் அவருக்கு இன்றுவரை உள்ளது.

2016 ஆம் ஆண்டில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அர்ஜுனா விருதை வினேஷ் பெற்றார். டோக்யோ ஒலிம்பிக்கில் தனது போட்டி தொடங்கும் வரை வினேஷ் போகாட் தனது திறனையும் உடற்தகுதியையும் பராமரித்தால், அவர் தனது எடை பிரிவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி அவரது முதல் போட்டி நடக்கவுள்ளது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி அவர் தனது 27 வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். டோக்யோ ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வென்றால், நாட்டிற்கும், அவருக்கும் இதைவிடப்பெரிய பரிசு இருக்கமுடியாது..

சீமா பிஸ்லா

சீமா பிஸ்லா இந்தியாவில் இருந்து டோக்யோ ஒலிப்பிக்கில் பங்கேற்கும் நான்காவது மற்றும் கடைசி பெண் மல்யுத்த வீரர் ஆவார்.

50 கிலோ எடை பிரிவில் சீமா போட்டியிடவுள்ளார். இந்த ஆண்டு மே மாதம் பல்கேரியாவில் நடைபெற்ற உலக ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளின் இறுதிப் போட்டியை எட்டியதன் மூலம் டோக்யோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்றார். அரையிறுதியில் சீமா 2-1 என்ற ஆட்டக்கணக்கில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற போலந்தின் அன்னா லுகாசியாக்கை தோற்கடித்தார்.

இதன் பின்னர், அல்மாட்டியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் ஜாஸ்மினா இமேவாவிடம் 2-3 என்ற கணக்கில் அவர் தோல்வியடைந்தார். பெண்கள் மல்யுத்த அணியின் பயிற்சியாளரான குல்தீப் மல்லிக்,'எதிர்பாராத வெற்றியை தரும் ' வீராங்கனை; என்று சீமாவை வர்ணிக்கிறார். சீமா பிஸ்லா மிகவும் கடின உழைப்பாளி என்றும் அவர் கூறுகிறார். சீமா பிஸ்லாவும் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். அப்போது அவர் 55 கிலோ எடை பிரிவில் களம் இறங்கினார்..

2019 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 50 கிலோ எடைப் பிரிவில் முதல் சுற்றில் அவர் தோற்றுப்போனார். சீமா பிஸ்லா தனது ஆரம்ப நாட்களில் 67 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார். பின்னர் அவர் 50 கிலோவாக குறைந்தார். இது மல்யுத்தத்தில் அரிதாகவே காணப்படுகிறது. ரோஹ்தக்கில் பிறந்த சீமாவின் குடும்பமும் மல்யுத்தத்துடன் தொடர்புடையது. சீமாவுக்கு 29 வயது மற்றும் அவரது எடை பிரிவில் போட்டிகள் மிக வேகமாக விளையாடப்படுகின்றன. அவரின் அனுபவம் அவருக்கு எவ்வளவு கைக்கொடுக்கும் என்பதை பொருத்திருந்தான் பார்க்கவேண்டும்.

அன்ஷு மல்லிக்

வினேஷ் போகாட்டுக்குப் பிறகு, டோக்யோ ஒலிம்பிக்கில் மல்யுத்த தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்த மற்றொரு இந்திய வீராங்கனை அன்ஷு மல்லிக். அவர் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை இது காட்டுகிறது.. இந்த ஆண்டு அல்மாட்டியில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதி மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தனது அற்புதமான திறமையை நிரூபித்த அன்ஷு மல்லிக் டோக்யோவுக்கு தகுதி பெற்றார். டிக்கெட் பெற்றார்.

57 கிலோ எடை பிரிவில் விளையாடும் அன்ஷு மல்லிக், இறுதிப் போட்டிக்கு வருவதற்கு முன்பு இரண்டு புள்ளிகளை மட்டுமே இழந்தார். 19 வயதான அன்ஷு மல்லிக்கின் தந்தை தரம்வீர் மல்லிக்கும் ஒரு மல்யுத்த வீரர் என்பது குறிபிடத்தக்கது. டோக்யோவில் அன்ஷு மல்லிக்கின் முதல் போட்டி, ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி அவரது பிறந்த நாள். கேக்குடன் ஒரு பதக்கமும் இருந்தால், அந்த மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இருக்காது.

ஜூனியர் மட்டத்தில், உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். கூடவே 2019 ஆம் ஆண்டு ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தையும், 2018 ஆம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இளம் மல்யுத்த வீரர் அன்ஷு மல்லிக் தொடர்ந்து வெற்றிகளை குவித்துவருவதை நாம் காண்கிறோம். அதே போல டோக்யோவில் தனது முழுத்திறமையையும் அவர் வெளிக்காட்டினால் அவருக்கு பதக்கம் நிச்சயம் என்றே சொல்லலாம்.

சோனம் மல்லிக்

62 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் சோனம் மல்லிக் மிகவும் எளிமையான இயல்பு கொண்டவர். அவரது உலகமே மல்யுத்தம்தான். மல்யுத்தத்தைத் தவிர மற்ற கேள்விகளுக்கு அவர் புன்னகையைமட்டுமே பதிலாக அளிக்கிறார். அவருக்கு 18 வயதே ஆகிறது. இந்திய மல்யுத்த அணியில் இடம்பெற்றுள்ள மிகவும் இளைய வீரர் அவர்தான். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதி போட்டி மூலம் அவர் டோக்யோ ஒலிம்பிக்கில் இடம் பிடித்தார்.

அரையிறுதியின் ஒரு கட்டத்தில் அவர் கஜகஸ்தானின் அயலிம் காசிமோவாவிடம் 0-6 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தார். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து ஒன்பது புள்ளிகளைப் பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஒலிம்பிக் இடத்தை பிடித்தார். குழந்தை பருவத்திலிருந்தே அவருக்குப் பயிற்சியளித்த அஜ்மீர் மல்லிக், 'இப்போது சீனியர் சுற்றுக்குத் சோனம் தயாராகிவிட்டார்' என்று கூறினார்.

சோனம் மல்லிக் இந்திய அணியின் மல்யுத்த அணியில் இடம்பிடித்த காரணத்தால், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்க்ஷி மல்லிக்கின் டோக்யோ கனவு, சிதைந்தது. தகுதிச்சுற்றில் சோனம் மல்லிக், சாக்‌ஷியை தோற்கடித்தார். அவரது வெற்றியின் ரகசியம் அவர் ஒருபோதும் எதையும் மறுப்பதில்லை என்று பயிற்சியாளர் அஜ்மீர் மல்லிக் ஒரு பிரத்யேக உரையாடலில் எங்களிடம் கூறினார்.

சோனம் மல்லிக், குளிர்காலம், கோடை, மழைக்காலம் என்று எதுவாக இருந்தாலும் பயிற்சி செய்யவும், இளைஞர்களுடன் போட்டியிடவும் எப்போதும் தயாராக இருப்பார் என்று அஜ்மீர் மல்லிக் மேலும் கூறினார். சாக்க்ஷி மல்லிக்கை தோற்கடித்தபோது சோனம் மீது அஜ்மீர் மல்லிக்கிற்கு நம்பிக்கை ஏற்பட்டது. சோனம் முதல் முறையாக சாக்ஷியை தோற்கடித்த போது அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். ஆனால் இப்போது சோனம் பல முறை சாக்க்ஷியை வென்றுள்ளார்.

சோனம் மல்லிக் 2016 ஆம் ஆண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், 2017 ஆம் ஆண்டில் தேசிய கேடட் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும், உலகப் பள்ளி விளையாட்டுகளில் தங்கப் பதக்கத்தையும், 2018 ஆம் ஆண்டில் உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தையும் வென்றார் . 2019 ஆம் ஆண்டில், உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் அவர் மீண்டும் தங்கம் வென்றார்.

சோனம் மல்லிக் 2017 ஆம் ஆண்டில் நரம்பு தொடர்பான பிரச்சனையை சந்திக்க நேர்ந்தது. இதிலிருந்து வெளிவருவதற்கு அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆனது. சில நாட்களுக்கு முன்னால் சோனம் மல்லிக் காயங்களால் பாதிக்கப்பட்டார். முழுமையாக உடல்நலம் பெற்று டோக்யோவில் மல்யுத்த வளையத்திற்குள் நுழைந்து, ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் கனவை அவர் நனவாக்குவார் என்று நம்புவோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :