You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரோஹித் ஷர்மா: ’பவளப் பாறைகளைக் காப்பாற்ற வேண்டும்’ - காலணிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகங்கள்
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் காலணிகள் இயற்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருவிகளாகப் பயன்பட்டு வருகின்றன.
ஹைதரபாத் அணியுடனான போட்டியின்போது நீலம் மற்றும் இளம் பச்சை வண்ணங்களிலான காலணியை ரோஹித் ஷர்மா அணிந்து வந்தார். அதில் பவளப் பாறைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரோகித் சர்மா, "கடற்பாறைகள் கடலின் இதயமும் ஆன்மாவும் போன்றவை. கடற்பாறைகள் நலமாக இருந்தால்தான் கடல் நலமாக இருக்கும். கடல் மீதான எனது அன்பு, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது." என்று கூறியிருக்கிறார்.
"நமது எண்ணத்திலும், நடவடிக்கையிலும் சிறு மாற்றத்தை உருவாக்க முடிந்தால்கூட அது சுற்றுச்சூழலுக்கு பேருதவியாக இருக்கும். கடல்களைப் பாதுகாப்பது நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதாகும்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பவளப் பாறைகள் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடம். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து ஒட்டிய கடலில் இருக்கும் பெருந் தடுப்புப் பவளத் திட்டு உலகிலேயே மிகப்பெரிய பவளப் பாறையாகும். இது சுமார் 2,500 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. விஞ்ஞானிகளின் கணிப்புப்படி 1995-ஆம் ஆண்டுக்குப்பிறகு பருவநிலை மாறுபாடு காரணமாக அதில் 50 சதவிகித உயிரினங்கள் அழிந்துவிட்டன.
இயற்கை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு வாசகங்களைப் பயன்படுத்துவது ரோஹித் ஷர்மாவுக்கு இது முதல்முறையல்ல. சீசன் 14 ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்தே வெவ்வேறு வகையான வாசகங்களைக் கொண்ட காலணிகளை அவர் அணிந்து வருகிறார்.
கடந்த 9-ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது உலகில் அருகிவரும் காண்டாமிருங்களுக்கு ஆதரவான வாசகத்தைக் கொண்ட காலணியை ரோஹித் ஷர்மா அணிந்திருந்தார். கிரிக்கெட் ஆடுவது தமது கனவு என்றும் உலகைச் சிறந்த இடமாக மாற்ற உதவுவது தனது பணி என்றும் அப்போது கூறியிருந்தார்.
இதேபோல 14-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது நெகிழி இல்லாத கடல் என்ற வாசகம் கொண்ட காலணியை அணிந்திருந்தார். அதில் கடல் ஆமைகளின் படங்களும் இடம்பெற்றிருந்தன.
உலக வனஉயிர் நிதியத்தின் காண்டாமிருகப் பாதுகாப்புத் தூதராக 2018-ஆம் ஆண்டில் ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். அப்போதும், காண்டாமிருங்கள் குறித்த தனது கவலையை அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
2019-ஆம் ஆண்டு பத்தாண்டு சவால் என்ற ஹேஷ்டேக் பிரபலமானபோது, பவளப் பாறைகளின் படத்தைப் பகிர்ந்திருந்தார் ரோஹித் ஷர்மா.
பிற செய்திகள்:
- இந்திய வகை கொரோனா: தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதா? - பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு
- கொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு
- தமிழகத்தின் சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் ஸ்ரீதர் வேம்பு - எப்படி சாத்தியம்?
- பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது
- "நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: