INDIA Vs ENGLAND: சேப்பாக்கம் டெஸ்டில் இரட்டை சதம் கண்ட ஜோ ரூட் - 450 ரன்கள் குவித்த இங்கிலாந்து

பட மூலாதாரம், ICC / ANI PHOTOS
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக அவர் இரட்டை சதம் அடிக்கிறார்.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 450 ரன்களை எடுத்துள்ளது. அதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 206 ரன்களை எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சிப்லே 87 ரன்களை எடுத்துள்ளார்.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஐந்து முறை இரட்டை சதம் அடித்துள்ளார் ஜோ ரூட்.
ஜோ ரூட்டின் இரட்டை சதங்கள்
ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 20 சதங்களை அடித்துள்ளார். இன்றையை போட்டிக்கு முன்பு வரை அவர் நான்கு இரட்டை சதம் அடித்துள்ளார். முதலாவது இரட்டை சதம் இலங்கை அணிக்கு எதிராக 2014ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.
இரண்டாவது 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் இரட்டை சதம் கண்டார்.
மூன்றாவது இரட்டை சதம் நியூசிலாந்துக்கு எதிராகவும், நான்காவது இரட்டை சதம் இந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராகவும் அமைந்தது. இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் 228 ரன்களை எடுத்திருந்தார்.
மூன்று போட்டிகள் மூன்று சதம்
ஜோ ரூட் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்று சொல்ல வேண்டும். இது இந்த ஆண்டில் அவர் ஆடும் மூன்றாவது டெஸ்ட் போட்டி.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக ஆடிய இரு போட்டிகளிலும் அவர் சதம் அடித்தார். முதல் போட்டியில் 228 ரன்கள் எடுத்து இரட்டை சதம் கண்டார். இரண்டாவது போட்டியில் 186 ரன்களை எடுத்தார். இரு போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸில் சதம் கொண்டார். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் தொடர்ந்து மூன்றாவது சதம் கண்டுள்ளார் ஜோ ரூட்.
முன்னதாக பேசிய ஜோ ரூட், தனது அணி 500 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்றும், அந்த இலக்கை அடைய தனது அணி வலுவாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ஒரே விக்கெட்டை மட்டுமே எடுத்தது. நான்காம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்ட்ரோக்ஸ் 124 ரன்களை எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் ஷாபாஸ் நதீம் தனது முதல் விக்கெட்டை எடுத்தார். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸின் கூட்டணியை வீழ்த்திய நதீமிற்கு இது இரண்டாவது டெஸ்ட் போட்டி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
எனவே முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில், ஷாபாஸ் நதீம் ஒரு விக்கெட்டையும், ஜஸ்ப்ரீட் பும்ரா இரண்டு விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். அதே சமயம் இதுவரை இஷாந்த் ஷர்மா எந்த விக்கெட்டுகளையும் எடுக்கவில்லை.
கபில் தேவ் மற்றும் ஜாஹிர் கானுக்குப்பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தும் மூன்றாவது பந்து வீச்சாளராக ஆவதற்கு இஷாந்த் ஷர்மா இன்னும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












