You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடராஜன்: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழக வீரருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைக்குமா?
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. அதில், வேகப்பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி தலா மூன்று போட்டிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது.
இந்த நிலையில், சுமார் இரண்டு மாதங்கள் நீடிக்கும் இந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில், தமிழகத்தை சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி மற்றும் தங்கராசு நடராஜன் ஆகிய நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் அஸ்வின் டெஸ்ட் அணியிலும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் டி20 அணியிலும் இடம்பெற்றுள்ள நிலையில் நடராஜன் கூடுதல் பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த நான்கு வீரர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, எளிய பின்னணியிலிருந்து, பல்வேறு தடைகளை கடந்து வந்து, தற்போது தனது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சினால் ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜன் தேர்வுசெய்யப்பட்டுள்ளது குறித்த பேச்சு அதிகமாக உள்ளது.
நடராஜன் களமிறங்குவாரா?
இந்த நிலையில், எவ்வித தொடரிலும் ஆடும் அணியில் நேரடியாக இடம்பிடிக்காமல் கூடுதல் பந்துவீச்சாளராகவே நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் உண்மையிலேயே களமிறங்கி விளையாடுவதற்கான வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னையை சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளரான எஸ். பாலாஜி, "நடராஜன் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர். கடந்த ஆண்டு காயம் காரணமாக அவதிப்பட்ட அவர் ஐபிஎல் போட்டிகளில் ஏகப்பட்ட யார்க்கர்கள் வீசி தனது திறமையை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார். இவ்வாறு கவனத்தை ஈர்த்ததன் காரணமாகவே அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவே பெரிய விடயம்தான்" என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தில் நடராஜன் விளையாடும் வாய்ப்பு எந்தளவுக்கு உள்ளது என்று அவரிடம் கேட்டபோது, "கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக கூடுதல் வீரர்களை அணியுடன் அழைத்துச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் அணிகள் உள்ளன. சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணியில் கூட ஏலத்தில் பங்கேற்காத சுமார் பத்து வீரர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்த வகையில், நடராஜனும் அழைத்து செல்லப்பட உள்ளார் என்றாலும் அணியில் வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக இவர் களமிறக்கப்பட கண்டிப்பாக வாய்ப்புள்ளது" என்று கூறினார்.
"நடராஜனோடு கமலேஷ் நாகர்கோடி, கார்த்திக் தியாகி, இஷான் ஆகிய திறமை வாய்ந்த இளம் பந்துவீச்சாளர்களும் கூடுதல் வீரர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களிடமிருந்து இந்த நீண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் நிறைய கற்றுக்கொள்வதே இவர்களது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். மற்றபடி, அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டால் இந்திய லெவன் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு எதிர்காலத்தில் நிச்சயம் கிடைக்கும்."
விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப்படாதது ஏன்?
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீரரான விஜய் சங்கர் சேர்க்கப்படாதது குறித்து அவரது தனிப்பட்ட பயிற்சியாளராக இருக்கும் எஸ். பாலாஜியிடம் கேட்டபோது, "விஜய் சங்கர் ஒரு சிறந்த வீரர். அவருக்கு எதிர்காலத்தில் இந்திய அணியில் சிறந்த வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன். ஒரு தொடரில் தேர்ந்தெடுக்கப்படாததை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. இதுபோன்ற சூழ்நிலையை பல்வேறு வீரர்களும் கடந்தே வந்துள்ளனர்" என்று கூறினார்.
"இந்திய அணியில் வீரர்கள் தேர்வுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்திய அணியின் எதிர்காலம் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்ட வீரர்கள் பலரும் தற்போது இடமே தெரியாமல் போய்விட்டனர். தற்போதைய சூழ்நிலையில், வீரர்கள் ஆல்-ரவுண்டராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விஜய் சங்கர் இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவருக்கு இனிவரும் தொடர்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: