You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: இந்தியாவில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் நவம்பர் 30வரை பொதுமுடக்கம் தொடரும்
இந்தியாவில் கொரோனா வைரஸையொட்டி அமல்படுத்தப்பட்ட பொது முடக்க நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் கூறுகையில், இந்தியா முழுவதும் பொது முடக்கம் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் தளர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறினர்.
பெரும்பாலான தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட அதே சமயம், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் தொடர்புடைய தொழில்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல, வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டதாகவும், அந்த மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் இயல்புநிலை திரும்புவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் உள்துறை அதிகாரிகள் கூறினர்.
மெட்ரோ ரயில்கள், ஷாப்பிங் மால்கள், விடுதிகள், உணவகங்கள், விருந்தோம்பல் சேவைகள், வழிபாட்டுத்தலங்கள், யோகா மற்றும் உடல் பயிற்சிக்கூடங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இதில் அடங்கும்.
இந்த நிலையில், உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில், வைரஸ் பொது முடக்க தளர்வுகள் தொடர்பான கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் 30ஆம் தேதிவரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் ஆபத்துக்கான வாய்ப்புகள், சில வகை செயல்பாடுகளால் ஏற்படலாம் என்பதால், அதை கவனத்தில் கொண்டு மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் அந்தந்த தொழில்களுக்கான மறுதிறப்பு அனுமதியை வழங்கும்போது, மத்திய அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை கவனத்தில் கொண்டு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உள்துறை அமைச்சக உத்தரவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செயல்பாடுகளில், பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்கள், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சித்துறையில் ஈடுபடுவோர் தொடர்புடைய தனியார் பல்கலைக்கழகங்கள், 100க்கும் அதிகமானோர் கூடாத வகையில் செயல்படும் இடங்கள் ஆகியவை அடங்கும்.
இந்தியாவுக்கு சர்வதேச பயணிகளின் வருகை தர அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சிக்கு மட்டும் தற்போதைக்கு திறக்கப்படும்.
தொழில்துறைக்கான கண்காட்சி அரங்குகள், 50 சதவீத இருக்கை வசதியுடன் கூடிய திரையரங்குகள் திறப்பு, சமூகம்-மதம்-பொழுபோக்கு, அரசியல் நிகழ்ச்சிகளில் அரங்கின் கொள்ளளவில் அதிகபட்சமாக 50 சதவீதம் பேர் மற்றும் 200 பேருக்கு மிகாமல் இருக்கும் வகையில் அவற்றை திறக்க அனுமதிக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் பரவலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பிரதமர் நரேந்திர மோதி முக கவசங்களை ஒழுங்காக அணியுங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள், 6 அடி பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடியுங்கள் ஆகிய மூன்று தாரக மந்திரங்களை கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அறிவித்திருந்தார். அதை அனைத்து குடிமக்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொதுமுடக்கம்
வைரஸ் பரவல் காணப்படும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொது முடக்கம், வரும் 30ஆம் தேதிவரை தொடரும். அந்த மண்டலங்களில் மிகக் கடுமையாக பொது முடக்கம் தொடரும். அவற்றில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும்.
ஒரு மாநிலத்தில் எந்தெந்த பகுதிகள், கட்டுப்பாட்டு மண்டலங்கள் என்பதை மாவட்ட நிர்வாகம், மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிட வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே தனியாக ஒரு பொது முடக்கத்தை மாநில அரசுகள் அமல்படுத்தக்கூடாது. மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் பொதுமக்களின் நடமாட்டம், சரக்குகளின் நடமாட்டத்துக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
65 வயதுக்கு அதிகமானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சுகாதார தேவை போன்ற அத்தியாவசியம் எழுந்தாலொழிய, வீட்டிலேயே தங்கியிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அனைவரும் ஆரோக்கிய சேது செயல்பேசி செயலியை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - 7 பேர் பலி
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள மத பாடசாலை ஒன்றில் வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது நிகழ்த்தப்பட்ட வெடிப்பில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்த நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேறுபட்ட வயதுப்பிரிவை சேர்ந்த குழந்தைகள் பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் உள்ள அதிகாரியொருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பெஷாவர் நகரம் சமீபத்திய ஆண்டுகளில் தலிபான் கிளர்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறைகளில் சில மோசமானவற்றை சந்தித்தது.
ஆறாண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள ராணுவப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் பல்வேறு குழந்தைகள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
எனினும், சமீபத்திய ஆண்டுகளில் பெஷாவரில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாத்ரஸ் வழக்கு: அலகாபாத் உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவு
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறப்பட்ட 19 வயது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான இந்திய புலனாய்வுத்துறையின் (சிபிஐ) விசாரணை, அலகாபாத் உயர் நீதிமன்ற கண்காணிப்புடன் நடைபெறும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .
இந்த விவகாரத்தில் உத்தர பிரதேச மாநிலத்துக்கு வெளியே வழக்கு விசாரணையை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
இதையடுத்து தலைமை நீதிபதி பாப்டே, வழக்கை வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்பான சிபிஐ முதலில் நடந்த சம்பவத்தின் நிலை குறித்து விசாரிக்கட்டும். வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றும் வாய்ப்பு எப்போதுமே உள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்று உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியிருப்பதால், அதில் தடங்கல் ஏற்படலாம் என அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நிலவர அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யுமாறும் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 20 வயது பட்டியலின பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறப்பட்டு பின்னர் பலத்த காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் செப்டம்பர் 30ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் அந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகவில்லை என்றும் அதற்கான தடயங்கள் கிடைக்கவில்லை என்றும் மாநில காவல்துறை தரப்பில் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக்குழுவை உத்தர பிரதேச மாநில அரசு நியமித்தது. இருப்பினும், அந்த விசாரணையின் மீது நம்பிக்கையில்லாத பெண் உரிமை அமைப்புகளும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாரும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளும் தலையிட்டதையடுத்து தேசிய கவனத்தை ஹாத்ரஸ் சம்பவம் ஈர்த்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தர பிரதேச மாநில அரசு பரிந்துரை செய்தது.
சிரியாவில் மீண்டும் தொடங்குகிறதா போர்? - ரஷ்ய வான் தாக்குதலில் 78 பேர் பலி
சிரியாவின் வடக்கு பகுதியில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் துருக்கி அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுவின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் இறந்துள்ளனர்.
ஃபயத் அல்-ஷாம் எனும் இஸ்லாமியவாத குழுவின் பயிற்சி மையம் ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சிரியா பிராந்தியத்தில் உள்நாட்டு வன்முறை தீவிரமாவதன் அறிகுறியாகப் பார்க்கப்படும் இந்தத் தாக்குதலில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் எனும் மனித உரிமைகள் அமைப்பு 78 பேர் இந்தத் தாக்குதலில் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கிறது.
ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மேற்பார்வையில் இட்லிப் மாகாணத்தில் சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. அது இப்போது சீர்குலையும் ஆபத்தில் உள்ளது.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பிராந்தியம் இட்லிப் மாகாணமாகும். ஒன்பது ஆண்டு கால உள்நாட்டுப் போரில் இஸ்லாமியவாத ஜிகாதி குழுக்களை சிரியா அரசு படைகள் தோற்கடித்தன.
மார்ச் மாதம் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது, சிரிய ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தினால், தங்களுக்கு பதில் தாக்குதல் நடத்தும் உரிமை உண்டு என்று துருக்கி அரசு கூறியது.
ரஷ்யா சிரியா அரசையும், துருக்கி கிளர்ச்சியாளர்களையும் ஆதரிக்கின்றன.
சிரியாவில் போர் எவ்வாறு தொடங்கியது?
'அரபு வசந்தம்' என்று அழைக்கப்பட்ட போராட்டங்கள் 2011இல் நடந்தபோது, சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தன.
சிரியாவில் போர் தொடங்குவதற்கு முன்னரே, அதிபர் பஷார் அல் அசாத் ஆட்சியில் அங்கு வேலையில்லா நிலையும், ஊழல் மற்றும் எந்தவித அரசியல் சுதந்திரமும் இல்லை என சிரிய மக்கள் தெரிவித்திருந்தனர்.
அண்டை நாடுகளில் எழுந்த அரபு வசந்தத்தால் தெற்கு நகரான டெராவில் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்கள் வெடித்தன.
எதிர்ப்பாளர்களையும், போராட்டக்காரர்களையும் ஒடுக்க அரசு முயன்றபோது, நாடு முழுவதும் அதிபர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, பதற்றநிலை அதிகரித்தது.
அரசுக்கு எதிரானவர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களை எடுத்தனர். முதலில் அவர்களை காத்துக் கொள்ள அவர்கள் ஆயுதங்களை ஏந்தினர். அதன்பின் தங்கள் பகுதிகளில் உள்ள அரசுப் பாதுகாப்பு படைகளை அழிக்க ஆயுதங்களை ஏந்தினர்.
வெளிநாடுகளின் ஆதரவு பெற்ற பயங்கரவாதம் என்றும் கருதிய அதிபர் அசாத் இதை ஒடுக்கத் தொடங்கினார்.
அந்த வன்முறை நாளடைவில் அதிகரித்து உள்நாட்டு போராக மாறியது. இதில் அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் வெளிநாடுகளின் தலையீடு ஏற்பட்டது.
அந்த நாடுகளும் சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியா ஆதரவு படையினர் மீது தாக்குதல் நடத்தின.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: