You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
KKIP Vs KKR: 360 டிகிரியில் சுழன்று விளாசிய தினேஷ் கார்த்திக் - பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கொல்கத்தா
18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. கைவசம் ஒன்பது விக்கெட்டுகள் இருக்கிறது. பேட்டிங் செய்த அணி தோல்வி அடைந்தது என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
கடந்த போட்டியில் சிஎஸ்கேவை கடைசி ஓவர்களில் அடக்கி வென்றது திணேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த முறை கொல்கத்தாவிடம் சிக்கி 2 புள்ளிகளை பறிகொடுத்திருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அப்படி என்ன நடந்தது?
கொல்கத்தா நிர்ணயித்த 165 ரன்கள் எனும் இலக்கைத் துரத்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. தொடக்க வீரர்கள் கே எல் ராகுல், மயங்க் அகர்வால் இணை அபாரமாக விளையாடியதால் முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. 17 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப்.
கேஎல் ராகுல் மற்றும் நிக்கோலஸ் பூரன் களத்தில் இருந்தனர். சுனில் நரேன் 18 வது ஓவரை வீசினார்.
முதல் பந்தில் ராகுல் ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் பூரன் அவுட் ஆனார். அங்கிருந்து பஞ்சாபுக்கு சரிவு தொடங்கியது.
அனுபவம் வாய்ந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக அனுபவமற்ற இளம் வீரர் சிம்ரன் சிங் களமிறங்கினார். அந்த ஓவரில் அதற்கடுத்த 3 பந்துகளில் அவர் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து மீண்டும் ஸ்டரைக்குக்கு வந்தார். போட்டியில் பதற்றம் கூடியிருந்தது.
இப்போது பிரசித் கிருஷ்ணா எனும் இளம் இந்திய பெயரை களமிறங்கினார் தினேஷ் கார்த்திக்,
சிம்ரன் சிங், ராகுல் என இருவரும் இந்த ஓவரில் அவுட் ஆயினர். சிம்ரன் சிங் 7 பந்தில் 4 ரன்கள் எடுத்தார்,
கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது பஞ்சாப். 6 பந்துகளில் 14 ரன்கள் என்ற சூழலில் மேக்ஸ்வெல் களமிறங்கினார். சுனில் நரேன் பந்துவீசினார். முதல் பந்தில் ரன் இல்லை, இரண்டாவது பந்தில் 2 ரன்கள், மூன்றாவது பந்தில் பௌண்டரி அடித்தார் மேக்ஸ்வெல். நான்காவது பந்தில் ஒரு ரன், ஐந்தாவது பந்தில் மந்தீப் அவுட், கடைசி பந்தில் போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்ல சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற சூழல்.
நரேன் பந்தை விளாசினார் மேக்ஸ்வெல், எல்லைக்கோட்டுக்கு முன்னர் மைதானத்தை முத்தமிட்டு சென்றது பந்து. பௌண்டரி மட்டுமே கிடைத்தது. இதனால் நூலிழையில் சூப்பர் ஓவருக்கு போட்டியை கொண்டு செல்லும் வாய்ப்பை இழந்தது பஞ்சாப் அணி.
முன்னதாக பேட்டிங்கில் கொல்கத்தா அணி ஆரம்பக்கட்டத்தில் மிகச் சுமாராக விளையாடியது, மூன்றாவது ஓவரிலேயே திரிபாதியை இழந்தது, அதற்கடுத்த ஓவரில் ராணா மிக மோசமான முறையில் ரன் அவுட் ஆனார். அதாவது இரு பேட்ஸ்மேன்களும் ஒரு முனையில் இருந்தனர். அதன் பின்னர் இயான் மார்கன் விரைவிலேயே அவுட் ஆனார். பின்னர் தினேஷ் கார்த்திக் வந்தார், கார்த்திக் கில் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தினேஷ் கார்த்திக் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்து ரன்கள் குவித்தார். 22 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார் தினேஷ் கார்த்திக். அவர் 8 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 29 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.
தினேஷ் கார்த்திக் இன்று ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
58 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தபோதும், அவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் மேக்ஸ்வெல்லை முன்கூட்டி இறக்காதது உள்ளிட்ட காரணங்களால் டிவிட்டரில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: