இந்திய வீராங்கனைகள் தடகளத்தில் மின்னுவது எப்படி?

    • எழுதியவர், அருண் ஜனார்த்தனன்
    • பதவி, பிபிசிக்காக

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை 36 ஆண்டுகளுக்கு முன்னர் மயிரிழையில் தவறவிட்டார் பி.டி. உஷா. 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அந்த ஒலிம்பிக் போட்டியின் 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டியில் பி.டி.உஷா நான்காவது இடத்தையே பிடித்தாலும், அவர் வெற்றிக்காக போராடிய தருணங்களின் நினைவலைகள் பல தலைமுறைகளை சேர்ந்த தடகள வீராங்கனைகளை ஊக்குவித்து வருகிறது.

மற்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளை விட தடகளத்தில் இந்திய பெண்கள் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை படைத்து வருவதற்கு காரணமான பலரில் உஷாவும் ஒருவர். பிபிசி மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, இந்திய விளையாட்டு வீராங்கனைகள் தடகளத்தில் மட்டும் இதுவரை சர்வதேச அளவில் 155 பதக்கங்களை வாங்கி குவித்துள்ளனர்.

137 பதக்கங்களுடன் துப்பாக்கிச் சுடுதல் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

பாட்மிண்டன் மற்றும் மல்யுத்தத்தில் முறையே 70 மற்றும் 69 பதக்கங்களை இந்திய வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

1951 முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 694 சர்வதேச பதக்கங்களை வாங்கி குவித்துள்ளனர். அதில் 256 வெண்கலம், 238 வெள்ளி மற்றும் 200 தங்கப்பதக்கங்களும் அடக்கம். குறிப்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு மட்டும் இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 174 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளனர்.

இருப்பினும், வெறும் ஐந்து இந்திய பெண்களே இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளனர். மற்ற எல்லா விளையாட்டு போட்டிகளையும் விட ஆசிய விளையாட்டு போட்டிகளின் தடகளத்தில் மட்டும் 109 பதக்கங்களை இந்திய வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

தடகளத்தில் இந்தியப் பெண்களின் இந்த ஈர்க்கக்கூடிய வெற்றி எண்ணிக்கையின் சரியான காரணங்களை பட்டியலிடுவது கடினம் என்றாலும், இந்த வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

முன்மாதிரிகளின் ஊக்கமளிக்கும் செயல்பாடு

1980 முதல் 2000கள் வரையிலான காலத்தை இந்திய பெண் தடகள விளையாட்டு வீரர்களின் பொற்காலமாக குறிப்பிடலாம். இந்த காலகட்டத்தில் மின்னிய இந்திய பெண் விளையாட்டு வீராங்கனைகளில் வல்சம்மா, ஷினி வில்சன், பீனமோல், அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் மற்றும் ஒரே இந்திய வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ்தான். இவர் 2003ஆம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் நீளம் தாண்டுதல் போட்டியில் இவர் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.

கேரளாவைச் சேர்ந்த இந்த விளையாட்டு வீராங்கனைகளில் பலர், சர்வதேச அளவில் கணிசமான பாராட்டுக்களைப் பெற்றது மட்டுமல்லாமல், பழமைவாத, சோசலிச நாட்டில் நிலவி வந்த கடந்தகால ஆண் ஆதிக்கத்தை முறித்தனர். இவர்கள் விளையாட்டில் பங்கேற்கும் உத்வேகத்தை மற்றவர்களுக்கு அளித்தனர்.

"பி.டி. உஷா மற்றும் அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் காலத்தை கடந்து விளையாட்டில் பெண்களுக்கு முன்மாதிரிகளாக விளங்கி வருகின்றனர்" என்று கூறுகிறார் இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீராங்கனையான அன்னு ராணி. "சாதாரண பின்னணி கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களால் சாதிக்க முடியும் என்றால் எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் செய்து காட்டினார்கள். கடின உழைப்பே மட்டுமே இதற்கு தேவையான ஒன்று" என்று அவர் கூறுகிறார்.

செல்வந்தராக இருக்க தேவையில்லை

மற்ற விளையாட்டுகளை விட தடகளம் இந்திய பெண்களிடையே பிரபலமாக இருப்பதற்கு அதற்கு கிட்டதட்ட எவ்வித கட்டுமான வசதியும் தேவைப்படுவதில்லை என்பதுதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தனது கால்களின் வலிமையை அதிகரிப்பதற்காக உஷா கடற்கரையில் அலைகளுக்கு எதிராக ஓடி பயிற்சி மேற்கொண்டார். இந்தியாவில் குழந்தைகள் தங்களது இளம் பருவத்திலிருந்தே பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் வருடாந்திர விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பங்கேற்கிறார்கள் என்று கூறுகிறார் கோழிக்கோட்டிலுள்ள தனியார் தடகள பயிற்சி கல்லூரியின் இணை நிறுவனரான ஸ்ரீனிவாசன்.

உடை குறித்த அச்சம்

நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் உடுத்தப்படும் உடை குறித்து எழும் விமர்சனம் தொடர்பான அச்சத்தின் காரணமாக இதுபோன்ற போட்டிகளில் இன்னமும் நகர்ப்புறங்களை சேர்ந்தவர்களே அதிகம் பங்கேற்கும் போக்கு காணப்படுவதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும், சமீப காலமாக இணையதளம், தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மற்றும் கல்வி உள்ளிட்டவற்றின் மூலமாக மற்ற நாடுகளின் கலாசாரம், பழக்கவழக்கங்களை அறியும் பெண்கள் அதன் மூலம் ஏற்படும் நம்பிக்கையின் காரணமாக பாலினம் சார்ந்த தடைகளை தாண்டி சாதிக்க தூண்டப்பட்டு வருகிறார்கள்.

அதிகரிக்கும் அரசாங்க ஊக்குவிப்பு

விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பதை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கிட்டத்தட்ட எவ்வித கட்டணமும் இன்றி பெண்கள் விளையாட்டு மையங்களில் தங்கி பயிற்சி பெறும் வாய்ப்பை வழங்குகிறது என்று கூறுகிறார் ஸ்ரீனிவாசன். இதுபோன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் காரணமாக, விளையாட்டு போட்டிகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது.

"எங்களது விளையாட்டு கல்லூரியில் சேர்க்கைக்கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்புவரை, மற்ற மாநிலங்களை சேர்ந்த சிலரும், பெரும்பாலும் கேரளாவை சேர்ந்தவர்களும் பயிற்சிக்கு வந்தார்கள். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது" என்று கூறும் ஸ்ரீனிவாசன், பி.டி. உஷாவின் கணவர் ஆவார்.

இன்னும் செல்ல வேண்டிய தூரம்...

ஒருபுறம் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரித்து வந்தாலும், சமுதாயத்தின் மனநிலையிலும், கட்டுமான வசதிகளும் இருந்தால்தான் இதுவரை இந்தியா ஒலிம்பிக்கில் சாதிக்க முடியாத தடகள பிரிவுகளில் முத்திரை பதிக்க முடியும் என்ற நிலை நிலவுகிறது. நாடுமுழுவதும் போதுமான எண்ணிக்கையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படாததே இதற்கு காரணம் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

"ஒருவரிடம் உள்ள திறமையை கண்டறிந்து அதற்கேற்ற பயிற்சியை கொடுப்பதற்கென மத்திய, மாநில அரசுகளின் துறைகள் மட்டுமின்றி தனியார் பயிற்சி நிலையங்களும் இருக்கின்றன. எனினும், விளையாட்டு போட்டிகள் குறித்த போதுமான விழிப்புணர்வு இன்னமும் தேவையான அளவை அடையவில்லை. உலக விளையாட்டு அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் 14 வயதுக்கு உட்பட்டோரிடையே கூட மிகுந்த போட்டி நிலவுகிறது" என்று ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு தடகள வீரர் தனது வேகத்தை, போட்டி திறனை அதிகரிப்பதற்கு மிகுந்த சவால் அளிக்கக் கூடியவர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது முக்கியமானது, ஆனால் இது எல்லோராலும் எளிதில் செய்யக் கூடிய ஒன்றல்ல.

"மிகுந்த சவால் அளிக்கக் கூடிய வீராங்கனைகளின் அணுகுமுறையும், செயல்பாடும் முற்றிலும் வேறுபட்ட வகையில் இருக்கும்" என்று கூறும் ராணி, உலக ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை கடந்த ஆண்டு படைத்தார்.

"ஒன்று அல்ல, பல ஒலிம்பிக் பதக்கங்களை நாங்கள் வென்று குவிப்போம்" என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: