IND vs NZ ODI series: ஒயிட்வாஷ் ஆனது இந்தியா; பழிதீர்த்த நியூசிலாந்து; ஏன்? எப்படி?

டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 3-0 என ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் செய்தது.

ஒருநாள் போட்டி தொடருக்கு முன்னதாக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என இந்தியா வென்ற நிலையில், ஒருநாள் போட்டி தொடரில் 3-0 என தோற்றது எப்படி?

  • டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ரோகித் சர்மா மற்றும் கே. எல். ராகுல் இணை அற்புதமாக விளையாடி அதிக அளவில் ரன்கள் குவித்தனர். அதேவேளையில் காயம் காரணமாக ஒருநாள் போட்டி தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மாவை இழந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மாயங்க் அகர்வால் மற்றும் பிரித்விஷாவால் அதிக அளவில் ரன்கள் குவிக்க முடியாதது தொடரில் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
  • கடந்த ஓராண்டுக்கும் மேலாக அணியின் வெற்றியில் பெரும் பங்குவகித்துவந்த வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஒருநாள் போட்டி தொடரில் அதிக அளவில் ரன்கள் வழங்கியதும், விக்கெட்டுகள் எடுக்க தவறியதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
  • நியூசிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த பேஸ்ட்மேன்களின் பங்களிப்பு ஒருநாள் போட்டி தொடரில் மிக சிறப்பாக இருந்தது. ராஸ் டெய்லர் முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்தின் வெற்றிக்கு பெரும் துணை புரிந்தார். கடைசி போட்டியில் கப்திலின் அதிரடி பேட்டிங் அந்த அணிக்கு உதவியது.
  • நியூசிலாந்து அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு இந்தியா ஒயிட்வாஷ் ஆனதற்கு முக்கிய காரணமாகும். பென்னட் மற்றும் நீசம் ஆகிய இருவரும் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடைசி போட்டியில் காலின் டி கிராண்ட்ஹாமின் அதிரடி பேட்டிங் அந்த அணி எளிதில் வெல்ல உதவியது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் வெற்றிகளில் விராட் கோலியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். இந்நிலையில் அவர் இந்த தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது தோல்விக்கு வழிவகுத்தது.

முன்னதாக, கடந்த சில போட்டிகளாக காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் அந்த அணிக்கு தலைமை தாங்கினார்.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.

போட்டியில் தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வால் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் விராட் கோலி 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுடன் இணை சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். 40 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, 9 பவுண்டரிகளின் துணையோடு ஷ்ரேயாஸ் அய்யர் 63 ரன்கள் குவித்தார்.

30.3 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டும் எடுத்து தடுமாறி கொண்டிருந்த இந்தியாவுக்கு கே. எல். ராகுல் மற்றும் மனிஷ் பாண்டே இணையின் ஆட்டம் பெரிதும் உதவியது.

ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய கே. எல். ராகுல் ஒரு கட்டத்தில் தனது வழக்கமான அதிரடி பாணியில் பேட்டிங் செய்தார். ஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது சதத்தை பதிவுசெய்த கே. எல். ராகுல், 113 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும்.

முன்னதாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியுற்ற இந்தியா தொடரை நியூஸிலாந்திடம் இழந்தது.

மூன்று அல்லது அதற்கு அதிகமான போட்டிகள் கொண்ட இருதரப்பு ஒருநாள் தொடரில் கடந்த 1989-இல்தான் இந்தியா ஒயிட்வாஷ் செய்யப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த தொடரில் 5-0 என்று இந்தியா தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது.

அதனால் இன்றைய போட்டியை வென்று ஒயிட்வாஷ் செய்யப்படுவதை தவிர்க்க இந்தியா கடுமையாக போராடி வருகிறது.

அதேவேளையில், ஒருநாள் போட்டி தொடருக்கு முன்னதாக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: