You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் மகள் ரூபா குருநாத் தேர்வு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) முதல் பெண் தலைவராக ரூபா குருநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகளான ரூபா குருநாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐ-யின் மாநில கிளைகளில் பெண் ஒருவர் தலைவர் ஆவது இதுவே முதல் முறை. தலைவர் பதவிக்கு ரூபாவின் பெயர் மட்டுமே போட்டியிட்டார்.
மேலும் தமிழ்நாடு 87வது பொது கூட்டத்தில் தலைவர், நிர்வாக குழுவினர் உள்ளிட்டோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பதவி காலம் 2022 வரை நீடிக்கும்.
ரூபா குருநாத்தின் கணவரான குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் தலைமை நிர்வாகியாக பதவி வகித்தார்.
ஆனால் கடந்த 2013ஆம் ஆண்டு குருநாத் மீது போட்டி நிர்ணய சூதாட்ட சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால் கிரிக்கெட்டிலிருந்து விலக்கப்பட்டு அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குருநாத் மெய்யப்பன் பெருந்தொகையான பணத்தை ஐபிஎல் போட்டிகள் மீது பந்தயம் கட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாட்டு உத்திகள் பற்றி பந்தய சூதாட்டத் தரகர்களுக்கு தகவல் தந்துவந்தார் என்றும் காவல்துறை அப்போது நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
சட்டவிரோத சூதாட்ட தரகர்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை தொடர்பிலேயே குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாடுகள் தொடர்பில் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதை அடுத்து ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகினார்.
பின் குருநாத் பிணையில் விடுதலையான பிறகு ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்டார். பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.யின்) அவைத் தலைவராக ஸ்ரீநிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வானதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட வரலாற்றையும், சிறந்த நபர்களின் தலைமையிலும் இயங்கிய டி.என்.சி.ஏ தொழில்முறை மாநில சங்கமாக விளங்குகிறது. அரசாங்கத்துடனான கால ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்னுரிமை வழங்குவேன். எந்தவொரு ஊழலையும் TNCA சகித்துக்கொள்ளாது. அத்தகைய நிகழ்வுகளில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தேவையான அனைத்து வசதிகளையும் தேவைகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம், மேலும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த விரும்புகிறோம்,” என்று ரூபா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்