இந்தியா v இங்கிலாந்து - சச்சின் சதம், இந்தியா 338 ரன்கள்-2011-ல் என்ன நடந்தது தெரியுமா?

இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மோர்கன் படை.

இந்த சமயத்தில் கடந்த 2011 உலகக்கோப்பையில் இந்தியா இங்கிலாந்துக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணயித்ததை சமுக வலைதளத்தில் பலரும் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

2011 உலகக் கோப்பையில் என்னதான் நடந்தது?

இந்திய மண்ணில் 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்தும் நெதர்லாந்தை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

லீக் சுற்றில் தனது இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்தது இந்திய அணி.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

ஆண்டர்சன் முதல் ஓவரை வீசினார். முதல் பந்திலேயே சேவாக் கேட்சை கோட்டை விட்டார் கிரீம் ஸ்வான், பந்து பௌண்டரிக்குச் சென்றது.

ஒன்பதாவது ஓவரில் பிரஸ்னன் பந்தில் வீழ்ந்தார் சேவாக். அதன் பின்னர் கவுதம் கம்பீரும் சச்சின் டெண்டுல்கரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். குறிப்பாக 27-வது ஓவரில் ஸ்வான் பந்துகளை அடுத்தடுத்து சிக்சருக்கு பறக்க விட்டார் சச்சின் டெண்டுல்கர்.

கம்பீர் அரை சதமடித்து அவுட் ஆனார்.

டெண்டுல்கர் மிகச்சிறப்பாக விளையாடி 115 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் பத்து பௌண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் விளாசியிருந்தார்.

ஆட்டத்தின் 39-வது ஓவரில் சச்சின் அவுட் ஆனபோது இந்தியாவின் ஸ்கோர் 236/3

அதன்பின்னர் யுவராஜ் அரை சதமடித்து அவுட் ஆனார். தோனி 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

பிரெஸ்னனின் 49-வது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. 50 வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

48-வது ஓவரின் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்திருந்தது இந்திய அணி. ஆனால் அடுத்த 11 பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்துக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி சேஸிங்கில் அபாரமாக விளையாடியது 42 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 280/2.

அந்த அணியின் வெற்றிக்கு 48 பந்துகளில் 59 ரன்கள் மட்டுமே தேவை. ஆன்ட்ரூ ஸ்டிராஸ் 150 ரன்களை கடந்த நிலையில் களத்தில் இருந்தார்.

அப்போதுதான் ஜாகீர்கானை பந்துவீச அழைத்தார் தோனி.

இங்கிலாந்து பேட்டிங் பவர்பிளே எடுத்திருந்த நிலையில் 43-வது ஓவரில் இயான் பெல், ஸ்டிராஸ் என இரண்டு பேட்ஸ்மேன்களையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் செய்தார் ஜாகீர்.

இயான் பெல் 69 ரன்கள், ஸ்டிராஸ் 158 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

தான் வீசிய 45-வது ஓவரில் காலிங்வுட்டையும் அவுட் செய்தார் ஜாகீர்.

இங்கிலாந்து 30 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. 46-வது ஓவரின் இரண்டாவது பந்தில் மேட் பிரியர் அவுட் ஆனார். ஜாகீர் வீசிய 47-வது ஓவரில் எட்டு ரன்கள் எடுத்து இங்கிலாந்து.

18 பந்தில் 34 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. இங்கிலாந்து கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருந்தன. முனாப் படேல் 48-வைத்து ஓவரை வீசினார். யார்டி அவுட் ஆக, அந்த ஓவரில் ஐந்து ரன்கள் மட்டும் எடுத்து இங்கிலாந்து.

12 பந்தில் 29 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலையில் சாவ்லா 49-வது வீசினார். அந்த ஓவரில் ஸ்வான் மற்றும் பிரெஸ்னன் தலா ஒரு சிக்ஸர்கள் விளாசினர். ஆனால் பிரஸ்னன் அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 14 ரன்கள். முனாப் படேல் வீசினார்.

  • முதல் பந்தில் இரண்டு ரன்கள்
  • இரண்டாவது பந்தில் ஒரு ரன்
  • மூன்றாவது பந்தில் சஷாத் சிக்ஸர் அடித்தார்.
  • நான்காவது பந்தில் ஒரு ரன்
  • ஐந்தாவது பந்தில் ஸ்வான் இரண்டு ரன்கள் எடுத்தார்
  • கடைசி பந்தில் வெற்றிக்குத் தேவை இரண்டு ரன்கள். ஸ்வான் எடுத்தது ஒரு ரன்.

ஆட்டம் டையில் முடிந்தது. அதுதான் உலகக் கோப்பை வரலாற்றில் டையில் முடிந்த நான்காவது போட்டி.

சச்சினின் 47-வது சதம் மற்றும் ஸ்டிராஸின் அபாரமான சதம் யாருக்கும் வெற்றியும் தோல்வியும் தராமல் முடிந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: