You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகக் கோப்பை 2019: அரை இறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெர்மிங்கமில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழக்காமல் உள்ளது இந்த அணி.
இந்த முறை உலகக் கோப்பையில் ஒரு முறைகூட தோல்வியை சந்திக்காத நியூசிலாந்து அணி நேற்று முதன்முறையாக தோல்வியடைந்தது.
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது நியூசிலாந்து. அதிகபட்சமாக ஜிம்மி நீஷம் 112 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். காலின் டி கிராண்ட்ஹோம் 71 பந்துகளில் 64 ரன்களை குவித்தார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு தோல்வியை சந்திக்காத நியூசிலாந்தை திணறவைத்தது. சிறப்பாக பந்துவீசிய ஷஹீன் அஃபிரிடி, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அபாரமாக விளையாடிய பாபர் அசாம் 127 பந்துகளில் 101 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹாரிஸ் சொஹைல் 76 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.
ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான், 49.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திரும்பும் வரலாறு
கடந்த 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், பாகிஸ்தான் அணி எப்படி வினையாடியதோ தற்போதைய ஆட்டம் அதே மாதிரி உள்ளது.
உதாரணமாக 1992ஆம் ஆண்டு தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதி தோல்வியடைந்தது. அதே போல, இந்தாண்டு உலகக் கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியை சந்தித்தது.
இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வி அடையாத நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி நேற்று வீழ்த்தியுள்ளது. இதுவேதான் 1992லும் நடந்தது. அப்போது நியூசிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு சென்றது பாகிஸ்தான். இந்த முறை இந்த வெற்றியால் முதல் நான்கு இடத்தில் பாகிஸ்தான் இல்லை என்றாலும், அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை இந்த வெற்றி உயர்த்தி உள்ளது.
புள்ளிப் பட்டியல்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்